Dienstag, 5. Februar 2008

தென்றலும் புயலும்














வெறுமனே கற்பனைக்குள்மட்டும் சிறைப்பட்டுக்கிடக்கிற காட்சிகளே கதைகளாக மாறுவதைக்காட்டிலும் கண்ணெதிரே விரிகின்ற காட்சிகள் அப்படியே எழுத்துவடிவம் பெறும்போது அதிலுள்ள யதார்த்தம் மனங்களில் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

கற்பனை என்பதுகூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்றாலும் "யாவும் கற்பனையே!" என்பதிலும் "யதார்த்தம்" என்பதற்கு இலக்கியத் தகுதி அதிகம் உண்டு.
"இதுதான் வாழ்க்கை!" என்று அப்படியே அச்சொட்டாக ஒப்புவிக்கிற படைப்புக்கள் "இதுதான் உலகம்!" என்ற உண்மையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கற்பனையிலிருந்து நாம் யதார்த்தத்திற்குக் காலடி எடுத்து வைக்கிறோம்.
தமிழகத்துப் படைப்பாளர்களின் கற்பனைகளோடும் எழுத்துக்களோடும் கலந்துமகிழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான பொழுதுகளின்போது திடீரென ஒர்நாள் ஒரு மாலைப்பொழுதில்"தென்றலும் புயலும்" என்னை வந்தடைந்தது.
நான் வாலிபனாகிக் கொண்டிருப்பதை அவ்வப்போது எனக்கு உணர்த்திக்கொண்டிருந்த தருணங்கள் அவை.
"வயதுவந்தவர்களுக்குமட்டும்!" என்று அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்ட எச்சரிக்கையை மீறிஅவற்றை வாசிக்கலாமா கூடாதா என்று தடுமாறுகிற பருவம். கையில் அகப்படுவதையெல்லாம் வாசித்துவிடு என்று துடிக்கிற மனது.
"பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை நிண்டு என்ன வாய்பார்த்துக் கொண்டிருக்கிறை..அங்காலை ஓடு!" என்று அதட்டுகிற பெரியவர்கள் இப்போதெல்லாம் என்னைப் பற்றிக் கவலைப்படாமல் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்.
"ஓ.. பெடியன் வளந்திட்டான்!"
தென்றலும் புயலும் எல்லோரும் வாசிக்கத் தக்க நாவல்தான்.
அதை வாசித்தபோது நான் வேறோர் உலகத்துக்குள் காலடி எடுத்துவைத்ததான ஓர் உணர்வு என்னுள் படர்ந்தது.
எனக்கு மிக அருகில் - எனக்குத் தெரிந்த மனிதர்கள் அந்தக்கதையில் இருப்பதுபோல் - அந்தக் கதாபாத்திரங்கள் என்னை நெருங்கி வந்தார்கள். எழுத்துக்களுக்குள் மண்வாசனை இருக்கிறது என்பதை எனக்குப் புரிய வைத்த முதற்கதை அது.

சராசரி வாசகர்கள் என்று கருதப்படுபவர்களால் சராசரிக்கதைகள் என்று சொல்லப்படுகிற கதைகள் வேறு சிலருக்கு காவியங்களாகத் தென்படுவது உண்டு.

"தென்றலும் புயலும்" கதை எனக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் அதைப்படித்த நேரத்தில் நான் அடைந்த உணர்வு இன்னும் என்னுள் புதிதாகவே இருக்கிறது.
அதை எழுதியதின் மூலம் என்னுள் புகுந்துகொண்ட அதன் ஆசிரியர் இளங்கீரன் (சுபைர்) இன்றும் என்மனதில் தனக்கென ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
பின்னாட்களில் அவர் தன் எழுத்துகளால் ஏராளமான வாசகர்களைக் கட்டிவைத்திருந்தார் என்பதை அறிந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை. அவரை எப்போதோ தெரிந்துவைத்திருக்கிறோம் என்று ஒருவித பெருமிதம் என்னுள் குடியேறியிருந்தது.
ஈழத்து இலக்கிய உலகில் அவரது சாதனைகள் பற்றி இப்போது பேசப்படும்போது அந்தப் பெருமிதம் இன்னும் அதிகமாகிறது.

-சின்னாச்சியின்ரைமோன்.

Sonntag, 13. Januar 2008

யாமறிந்த புலவரிலே...


















காலையில் கண்விழித்துக்கொள்ளும்போது நேற்றையப் பொழுது கனவாய்க் கலைந்துவிட்டிருப்பது தெரிகிறது.
நாள் வாரம் மாதம் வருடம் என்று காலக்கணக்கில் கரைந்து போய்விடுகிறது வாழ்க்கை.
நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமை காட்டும் உலகில்
நின்றுநிலைப்பவை நாம் விட்டுச்செல்லும் நம்மைப்பற்றிய நினைவுகள்தான். அவற்றை அடையாளப்படுத்தும் இலக்கியங்கள்தாம்.

வாசிப்பு என்பது ஒரு இனிமையான அனுபவம்.
கற்பனையோ யதார்த்தமோ எதுவாயினும் எழுத்தாளன் காட்டுகிற புதிய உலகத்துக்குள் நுழைந்து அதற்குள் ஐக்கியப்பட்டுப் போகிற அற்புத அனுபவம். கண்ணெதிரே விரிந்து கிடக்கிற உலகத்துக்கு அப்பால் புதியதொரு உலகத்தினுள் பிரவேசித்து இன்னொருவர் அந்தரங்கத்தில் தானும் ஒரு விருந்தாளியாய் தன்னை மறக்கிற சுகானுபவம்.

வாசித்து முடித்தபின்னும் மிக நீண்ட காலத்துக்கு நமது மனங்களுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிற படைப்புக்கள் - அவை எத்தகையனவாக இருந்தாலும்- இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுவிடுகின்றன.

"எதிர்காலத்தில் நீ எதுவாகப் போகிறாய்?" எல்லோரிடத்திலும் பள்ளிப்பருவத்தில் எப்போதாவது எல்லோரிடத்திலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரும்பாலும் பதில்கள் எதிர்காலத்தில் வருவாயோடு சம்பந்தப்பட்ட அரச பணி குறித்ததாகவே இருக்கும். டொக்டராக, எஞ்சினியராக, ரீச்சராக என்று வரும் பதில்கள்.
"எழுத்தாளனாக!" என்ற பதில் என்னிடமிருந்து வந்தபோது சகமாணவர்கள் என்னை வியப்போடு பார்த்தார்கள்.
"எழுத்தாளன் என்றால்..?"
"இந்தக் கதை கட்டுரை கவிதை என்று எதையாவது கிறுக்குவது!"
"ஆனால் இது உத்தியோகம் இல்லையே?!"
"ஏன் இல்லை..? நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் என்றானே பாரதி!"
"ஆர்..?"
"பாரதியார்!"
"பாவம்... வாழ்க்கையிலை அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்!"
ஆனால் இன்னும் வாழ்கிறான் பாரதி.
அவனது கனவுகள் வாழ்கின்றன.
சின்னவயதில் நான் படித்த பாரதியின் முதல்பாடல்-
"ஓடி விளையாடு பாப்பா!"
பாரதியார் என்பவர் சின்னப் பிள்ளைகளுக்குப் பாட்டு எழுதும் ஒரு புலவர் என்பதாகமட்டுமே அப்போது எனக்குத் தெரிந்தது.
இலக்கியப் பாடத்தில் இடம்பெற்றிருந்த பாரதியின் பாடல்கள்மூலம் அவர் என்னுள் தன்னை இணைத்துக்கொண்டார்.
அவர்மேல் நான் கொண்டிருக்கும் பிரியம் இன்னும் தொடர்கிறது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை...
-என்பானே பாரதி.
அந்தவரிசையில் தானும் ஒருவனாய் சங்கமித்துவிட்ட பெரும் புலவன் அவன்.


- சின்னாச்சியின்ரமோன்

Freitag, 11. Januar 2008

சொல்லைத்தான் நினைக்கிறேன்


ஒவ்வொரு வார்த்தைக்கும்பொருள் உண்டு.
ஆனால் அந்தப் பொருளை அத்தனை இலகுவாகக் கண்டுபிடித்துவிட முடியாதுதான். கண்டுபிடித்துவிட முடியவில்லை என்பதற்காக காரணம் இல்லையென்று ஆகிவிடுவதுமில்லை.
ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து இன்னது இன்னதற்காகவே என்று முன்னோர்கள் சொல்லிவைத்ததை அர்த்தம் தேடாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் நாம்.
எழுதும் பொருளை எழுத்தாணி என்கிறோம்.
எழுதுவதால் அது எழுத்தாணி. சரி.ஆனால் இந்த எழுத்து என்பதற்கு எழுத்து என்று ஏன் பேர் வந்தது? எழுதுவதாலா? சரி. இதை எழுதுவது என்பதை எழுதுவது என்று உருவாக்கியவர் யார்?
எழுதுவது என்பதற்குப் பதிலாக வேறு வகையாக ஏன் அதைச் சொல்லவில்லை?
- இத்தகைய ஆராய்ச்சிகள் நமது ஆர்வத்தைத் தூண்டலாமே தவிர இதுவெல்லாம் நமது அறிவுடைமையைக் குறிக்காது.
உயிர் எழுத்து பன்னிரண்டு, மெய்யெழுத்து பதினெட்டு, உயிர்மெய்யெழுத்து இருநூற்றிப் பதினாறு, ஆய்த எழுத்து ஒன்று ஆக மொத்தம் தமிழில் எழுத்துக்கள் இருநூற்றி நாற்பத்தியேழு என்று கற்றுக்கொண்டு கணக்கை ஒப்புவித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் அழகு.
ஆனாலும் நமக்கு ஆர்வம் குறைவதில்லை.
ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கான தேடலும் ஓய்வதில்லை.

வகுப்பில் அன்றைக்கு இலக்கியப் பாடம்.
வகுப்பறையில் வந்தமரும் தமிழ் ஆசான், கம்பராமாயணம் சுந்தர காண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் பக்கங்களைப் புரட்டியபடி எழுந்து மேசைக்கு முன்புறமாக எங்களைப் பார்த்தபடி வந்துநிற்கிறார்.
நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகம் கேள்வியாக வருகிறது.
"இலக்கியம் என்றால் என்ன "சேர்?"
ஆசிரியரின் உதடுகளில் புன்னகை.
மூக்குக் கண்ணாடியைத் தளர்த்தி அதன் மேலாக என்னைப் பார்த்தவர் வேடிக்கையாகச் சொல்கிறார்:
"இலக்கியம் என்றால் இலக்கியம்தான்!"
"இது எங்களுக்குத் தெரியாதாக்கும்!" எனக்குள் புறுபுறுத்துக்கொள்கிறேன். சகமாணவர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்.
ஆசிரியர் சுந்தரகாண்டத்தை மூடிப்பிடித்தபடி சொல்கிறார்:
"ஓர் இலக்கு நோக்கி இயம்பப்படுவது இலக்கியம்!"
"சரி.. இலக்கு என்றால் என்ன?" என்று எனக்குள் எழுந்த கேள்வியை அவரிடம் நான் கேட்கவில்லை.
அவரது பதிலை ஆமோதித்தவனாய் மெளனம் காக்கிறேன்.
இலக்கியம் பற்றி மேலதிக விளக்கங்களுக்குள் போகாமல் கம்பராமாயணத்துள் புகுந்துவிடுகிறார் ஆசிரியர்.

"எந்த ஒரு மொழியையும் அழகுபடுத்துவது இலக்கியம். இலக்கியம் படைப்பவன் தன் தாய்மொழிக்குச் சிறப்பைத் தேடித்தருகிறான்!" என்பது காலம் எனக்குக் கற்றுத்தந்த உண்மை.
இலக்கியம் என்றால் நாம் வாழும் காலத்துக்கு முந்தையவர் படைத்தவை மட்டும்தான் என்று நம்மில் பெரும்பாலோர் எண்ணிக்கொண்டிருக்கிறோம். நமது சமகாலத்தில் இலக்கியம் படைத்தவர்களையோ படைப்பவர்களையோ புறந்தள்ளும் போக்கு ஒரு நோயாகப் படர்ந்திருக்கிறது.
மற்றவர்களுடைய கசப்பான விமர்சனங்களைக் கைகழுவிவிட்டு இலக்கியம் தன்பாட்டில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இன்னும் அது வளரும்.
இந்த உலகின் எந்தெந்த மூலைகளிலெல்லாம் நமது மொழி வாழ்கிறதோ அங்கிருந்தெல்லாம் இலக்கியங்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. காலம் அவைகளை அடையாளம் கண்டுகொள்ளாமல் போவதில்லை.
-சின்னாச்சியின்ரமோன்

Sonntag, 30. September 2007

கதை சொல்லிகள்!


"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா!
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு..."
-அதிகாலையில் ஒலிபெருக்கிவழியாக துயில் எழுப்பும் எம். எம். தண்டபாணி தேசிகரின் கணீா்க்குரல்.

திருவிழாக்காலங்கள்..
கண்ணகி கோயிலின் முற்றத்துப் பந்தற்கால்களில் உயரக் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி வழியாக தேவார திருவாசகங்கள் ஊருக்குள் உலாவந்துகொண்டிருக்கும்.
இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தபோதும் தூங்காமல் கண்களை மூடிக்கொண்டு இசையை இரசித்துக் கிடப்பதில் ஒரு சுகம்.
அதில் ஒருபோதும் சலிப்பு வந்ததில்லை.
செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் என்று பக்திப்பாடல்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில் தேவார திருவாசகங்களோடு வந்த தண்டபாணி தேசிகரின் குரலில் மனமும் சற்று ஆழமாகவே மூழ்கிக் களித்தது.
என் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த கலட்டிப் பிள்ளையார் கோயிலில் பங்குனித் திங்களில் உற்சவங்கள் நடக்கும். 7ம் திருவிழா அப்புவினதும் அவரது உடன் பிறப்புக்களினதும் உபயமாக இருந்தது.

முன்பெல்லாம் கண்ணகி அம்மன் கோயில் திருவிழாக்களில் அயலுார்களிலிருந்தெல்லாம் மேளக் கச்சேரி, பொம்மலாட்டம், கதாகாலாட்சேபம் என்று கலை நிகழ்வுகளோடு ஆலயத்திருவிழாக்கள் அமர்க்களப்படும். பின்னாட்களில் இந்தக் கூத்துக் கும்மாளங்கள் கோயில் திருவிழாக்களுக்குக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும். ஆனால் மேளக்கச்சேரிகளும் கதாப்பிரசங்கங்களும் தொடர்ந்து நடைபெற்றன.

அப்புவுக்கு ஆடம்பரத் திருவிழாக்கள் பிடிப்பதில்லை.
எனக்கென்னமோ இந்தக் கலை நிகழ்வுகள் இருந்தால்தான் திருவிழாக்களுக்கு சிறப்பு என்பதைப்போல் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
"இண்டைக்குத் திருவிழாவிலை என்ன விசேசம்?" என்று ஆராவது கேட்டால், இத்தனைகூட்டம் மேளக்கச்சேரி என்றோ இன்னாரின் நாட்டியம் என்றோ இன்னாரின் கதாப்பிரசங்கம் என்றோ "நோட்டீஸ்" அடித்துக் காட்டுவதில் பெருமைப்படுகிற திருவிழாக்காரரைப் பார்க்கையில் சந்தோசமாக இருக்கும்.
"திருவிழா எண்டால் இப்படி இருக்கவேணும்!" என்பேன்.
"அப்புவுக்கு இதெல்லாம் பிடிக்காது.. இப்ப அவரின்ரை விருப்பப்படி நடக்கட்டும்.. நாங்களும் திருவிழாச்செய்கிற காலத்திலை இந்தியாவிலையிருந்து சீர்காழியைக் கூப்பிடுவம்!" என்று சொல்லிச் சிரிப்பார் என் பெரியண்ணா.

கலட்டிப் பிள்ளையார் கோயிலின் எங்கள் திருவிழா நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
"இண்டைக்கு எங்கடை திருவிழாவிலை ஒரு விசேசம்!"
"என்ன"
"இண்டைக்கு இரவு கதாப்பிரசங்கம் இருக்குது!"
"ஆர்.. திருமுருக கிருபானந்தவாரியாரோ?"
"இல்லை..திருமுருக நல்லதம்பி!"
"ஆர்..?"
"அவர்தான்ரா எங்கடை நல்லதம்பி மாமா!"
ஆச்சரியமாக இருந்தது.
இரத்தினபுரியிலோ எங்கோ கடை முதலாளியாக இருக்கிற எங்கடை மாமா (என் தாயின் தம்பி) கதாப்பிரசங்கமும் செய்வாரா?
"இரத்தின புரியிலை இருக்கிற ஒரு கோயில்லை மாமா ஒருமுறை கதாப்பிரசங்கம் செய்தபோது அங்கை வந்திருந்த திருமுருக கிருபானந்தவாரியாரே அவருக்கு திருமுருக நல்லதம்பி எண்டு பட்டம் குடுத்தவராம்!"
கேட்டபோது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

கலைகள் என்பது வெறுமனே எங்கிருந்தோ இறக்குமதியாகிற விடயமல்ல. அது ஒவ்வொருவர் மனதிலும் ஊற்றெடுக்கிற உணர்வுகளின் பிரதிபலிப்பு. கலைகளின்பால் அதீத பற்றுதலும் அதற்கென அயராது உழைத்தலும் ஒருவனைப் பிரபலமாக்கிவிடுகிறதே தவிர, ஏராளமான கலைஞர்கள் உலகின் எல்லா மூலைகளுக்குள்ளும் நடமாடிக்கொண்டுதானிருக்கிறார்கள் என்ற உண்மை மாமாவின் உருவத்தில் எனக்கு வெளிப்பட்டது.

இளம்வயதிலேயே அவர் புற்றுநோய்க்குப் பலியாக நேர்ந்தாலும் அவரது கம்பீரமான அந்தக் குரலும் அவரது கதாப்பிரசங்கமும் இப்போதும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

"உங்கடை மச்சான் எண்டதாலதான் நல்லதம்பியின்ர கதாப்பிரசங்கத்துக்கு உங்கடை திருவிழாவிலை இடம் கொடுத்தனீங்களே?" என்று யாரோ அப்புவைக் கேட்டார்கள்.
"மச்சான் எண்டதால இல்லை. கதாப்பிரசங்கத்திலை கெட்டிக்காரன் எண்டதாலை!" என்றார் அப்பு.
-சின்னாச்சியின்ரைமோன்.

Freitag, 28. September 2007

முகங்களும் மனங்களும்


முன்பின் அறிமுகமில்லாத சில முகங்களைப் பார்த்ததும் ஏதோ ஒருவகைப் பாசம் அல்லது ஈர்ப்பு நமது மனங்களில் சட்டென வந்து ஒட்டிக்கொள்கிறது. ஆனால் அதேயளவு பாசமோ ஈர்ப்போ அந்த முகங்களில் தெரிவதில்லை.சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள் அவர்கள்.


இன்னும் சில முகங்கள் இதற்குநேர் எதிர். முதல்பார்வையிலேயே அவர்களைத் தூர வைத்துவிட வேண்டும் என்பதுபோல் ஒருவித கசப்போ வெறுப்போ நம்மையறியாமலேயே நமக்குள் வந்து குடியேறிவிடுகிறது. ஆனால் அவர்களோ எங்களோடு பழகவும் பாசம்காட்டவும் துடிக்கின்ற மனத்தினராக இருப்பார்கள்.


ஏன் இப்படி நேர்கிறது என்று பலதடவைகள் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

ஏதோ ஒருவிதத்தில் அழகானவர்கள் எல்லாம் மற்றவர்களைக் கவர்ந்துகொள்கிறார்கள் அழகில்லாதவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பதாகத்தான் என் சின்ன வயதில் எனக்குத் தோன்றியது.
அதனாலேயே அழகானவர்கள் என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றவர்களைவிட அழகில்லாதவர்கள் என்று மற்றவர்களால் சொல்லப்படுகிற அல்லது எனக்குத் தோன்றுகிறவர்கள்மீது என்னையறியாமலேயே ஒருவித பாசம் துளிர்ப்பதை அவ்வயதில் அதிகம் உணர்ந்திருக்கிறேன்.


அழகுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் "வடிவான பெடியங்கள்" வரிசையில் சேர்வதற்கு எனக்குத் தகுதியில்லை என்றும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வில் நான் வாழ்ந்திருக்கிறேன்.

(கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கொள்ளும்போது என் உடல் மாநிறமாய்த்தெரிந்தாலும் உள்ளத்துக்குள் எப்போதுமே என்னை ஒரு கறுப்பனாகவே நான் நினைத்துக்கொண்டிருப்பது ஏன் என்பது இன்னமும் எனக்கு விளங்காத புதிர்)


அப்பு -என் தந்தையார்- நல்ல நிறம். ஆனால் ஆச்சி- என் அன்னையார்- மாநிறத்துக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட ஒரு பொதுநிறம்.எப்போதும் ஆச்சியின் முகத்தையே பார்த்து வளர்ந்தவன் என்பதனாலேயோ என்னவோ நான் மாநிறத்தவனாக எனக்குத் தோன்றுவதில்லை.


"நான் வடிவா ஆச்சி?"

-என் மாணவப் பருவத்தில் ஒருநாள் என் அன்னையிடம் கேட்டேன்.

"உனக்கென்னடா குறைச்சல்.. நீ என்ரை அப்பு மாதிரி! அவரின்ரை வடிவெண்டால்...?" என்று நிறுத்தி தன் தந்தையின் நினைவுகளில் மூழ்கிப்போனா ஆச்சி.

"இப்ப நான் வடிவா எண்டுதான் கேட்டனான்...உன்ரை அப்பு வடிவாயிருந்தால் எனக்கென்ன..?" என்று கோபித்தேன்.

"என்ரை அப்புவைப்போல நீ எண்டால்.. நீயும் வடிவெண்டுதானை அர்த்தம்!"

ஆனால் எனக்கென்னவோ ஆச்சியின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே. ஆச்சி வேறை என்ன சொல்லுவா!
"நீ பிறந்துகிடக்கேக்கை உன்ரை சின்னமாமா வந்து உன்னைத் தூக்கிவைச்சுக் கொஞ்சிப்போட்டுக் கேட்டான்.. என்னக்கா இவன்ரை கை ரோசாப்பூமாதிரி இருக்குதெண்டு... அப்பிடி மினுங்கிக்கொண்டு கிடந்தனீ"

"..ம்.. அது சின்னப் பிள்ளையிலை.. சின்னப்பிள்ளை எண்டால் எல்லாப் பிள்ளையளும் வடிவுதான்!"

"அப்ப.. இப்ப நீ என்னை என்ன சொல்லச்சொல்லுறை..? நீ வடிவில்லையெண்டு சொல்லட்டே?"


"வேணாம் வேணாம்...நான் வடிவெண்டு எனக்குத் தெரியும்...சும்மா கேட்டுப் பார்த்தன்!" என்று அவசரமாகச் சொல்லி ஆச்சியைச் சிரிக்கவைத்துவிட்டு அந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.


எந்த ஒரு படைப்பாளியையும் அவர்களது படைப்பின்மூலம் சந்தித்துக் கொள்ளும்போது அவர்பற்றிய ஒருவிதமான கற்பனையும் நம்முள் இடம்பிடித்துக் கொண்டுவிடும்-இவர் இப்படித்தான் இருப்பார் என்று.


அனேகமான படைப்பாளிகளை நாம் நேரில் சந்தித்துக் கொள்ளாததால் அவர்கள் பற்றிய சில "படங்கள்" நமது மனத்திரையில் அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன. என்றாவது ஒருநாள் அவர்களைப் புகைப்படங்களின் மூலமோ அல்லது நேரிலோ சந்தித்துக்கொள்ளும்போது "இவரா அவர்?" என்று ஆச்சரியப்படவே தோன்றும். ஒருபோதும் நமது மனங்களில் நாம் வரைந்திருக்கும் தோற்றத்தைப்போல் அவர்கள் இருப்பதில்ல என்பதே யதார்த்தமாகிவிடுகிறது. ஒருவரது எழுத்துக்களைப் படித்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று எதிர்பார்ப்பது எத்தனைதூரம் அர்த்தமற்றதோ அதேபோல் எழுதுகிறபடியெல்லாம் அவர் வாழ்கிறார் என்றோ வாழவேண்டும் என்றோ எதிர்பார்ப்பதும் தவறு என்று விரைவாகவே புரிந்துகொண்டேன் நான்.


முகங்கள் வேறு மனங்கள் வேறு என்று எனக்கு உணர்த்திய நூல்களில் முக்கியமானது மகாத்மாவின் "சத்தியசோதனை"

சத்தியசோதனையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏராளம்.
ஒரு மகாத்மாவால்மட்டுமே இத்தகைய சுயசரிதையை எழுதமுடியும் என்று நிரூபிக்கும் நூல் அது.

-சின்னாச்சியின்ரமோன்.

Donnerstag, 5. Juli 2007

நான் பேச நினைப்பதெல்லாம்...

"உனக்கு இராமாயணம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"சீதையை இராவணன் சிறையெடுத்ததும், பிறகு இராம இராவண யுத்தம் நடந்ததும்!"
"இன்னொரு சம்பவம்!"
"சீதை தீக்குளித்தது!"


"உனக்கு மகாபாரதம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"பாஞ்சாலி சபதம்!"
"கொஞ்சம் விளக்கமாச் சொல்லு!"
"தருமர் சூதாட்டத்தில் திரெளபதியைப் பணயம் வைத்துத் தோற்றதும், துச்சாதனன் துகிலுரிந்ததும், அவனுடைய இரத்தத்தைப் பூசித்தான் கலைந்த தன் கூந்தலை முடிப்பேன் என திரெளபதி சபதம் எடுத்ததும், பிறகு நடந்த பாரதப் போரும்!"


"சிலப்பதிகாரம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான சம்பவம்!"
"கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியைத் தேடிப்போனது!"


ம்.. இப்படித்தான்...
எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் மனிதனுடைய தவறுகளும் பலவீனங்களும்தான் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.
அவைகளிலிருந்து அவன் மீண்டுவிட்டால் அத்தோடு கதையும் முற்றுப் பெற்றுவிடுகிறது.
குற்றம் கண்டுபிடிப்பதும் குறைசொல்வதும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகாட்டுவதும் என்றே எல்லாக் கதைகளும் வளர்த்துச் செல்லப்படுகின்றன. இயல்போடு ஒத்ததான எல்லாக் குணாதியசங்களும் எல்லா மனிதர்களிடத்தும் இருக்கின்றன.
சிலரிடம் சில குணாதிசயங்கள் மிகுதியாய்த்தெரிகிறபோது அவர்கள் மற்றவர்களது கவனிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.



இந்த உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்டகாலமாயிற்று.
எல்லோரையும் நல்லவராகவே பார்த்து வளர்ந்த கண்களுக்கு ஆங்காங்கே சிலரது குறைபாடுகள் தெரியத் தொடங்கியபோது முற்றிலும் புதிதான வேறோர் உலகத்துக்கு வந்துகொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.


வானொலி வழியாக வந்த பாடல்களில் பெரும்பாலானவை காதலையே அடிநாதமாகக் கொண்டு ஒலித்தபோதும் வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் அவை எடுத்துவரத் தவறவில்லை.


கவிதைகள் பற்றி அவ்வளவு ஆர்வமில்லாத ஒரு பருவத்தில் பாடல்களை அதிகமாய் இரசிக்க முடிந்திருந்தது.
கவிதைகளும் பாடல்களும் ஒன்றா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பாடல்களுக்குள் கவிதைகள் இருந்தன.

கவிதைகளுக்குள்ளும் பாடல்கள் இருந்தன என்று எனக்குக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

அவர் திரைப்படங்களுக்கு எழுதிய சில பாடல்கள் ஒரு தொகுப்பாக என் சின்னவயதில் எனக்குக் கிடைத்தபோது அதில் ஆழ்ந்து போனேன்.

வார்த்தைகளால் தமிழுக்கு வண்ணம் சேர்த்த கலைஞர் கருணாநிதிபோல் பாடல்களால் தமிழுக்கு அழகுசேர்க்க வந்தவன் நான் எனத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார் கண்ணதாசன்.

திரைப்படப் பாடல்கள் எல்லாமே கவிதைகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. கவிநயமில்லாத அல்லது கவிதையே இல்லாத இரண்டு வசனங்களை எழுதி அதற்கு இசையமைத்து அதை ஒரு பாடலாக மாற்றிவிடமுடியும்.

ஆனால் எழுதிய பாடல்கள் எல்லாமே கவிதைகளாக உருப்பெற்றிருந்த விந்தையை கண்ணதாசனிடம் கண்டேன்.

என் சிறுவயதில் என் மனதில் இடம் பிடித்துக்கொண்ட கவியரசு கண்ணதாசன் இங்கே இன்னும் நிரந்தரமாகக் குடியிருக்கிறார்.


-சின்னாச்சியின்ரமோன்

Sonntag, 24. Juni 2007

கள்ளத் தோணி


ஒரு மாலைப் பொழுது.
சிவந்த சூரியன் பாதியாய்க் கடலுக்குள் வீழ்ந்து நீலக்கடலை கருப்பாக்கிக் கொண்டிருந்தான்.
கண்ணகிகோயிலுக்கு முன்புறமிருந்த நல்லதண்ணீர்க் கிணற்றிலிருந்து நீரள்ளிப் போக வந்த அக்காவின் பின்னால்,வாளியை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன்.
வாளிக்கயிற்றில் பாதி என் கையிலிருந்து வழுவி எனக்குப் பின்னால் பாம்பென வளைந்து வந்துகொண்டிருந்தது.
கடற்கரையை ஒட்டியிருந்த வீதியின் வழியாகச் சிலர் வருவது தெரிகிறது. நாங்கள் கிணற்றை நெருங்கியபோது அவர்கள் எங்களைக் கடந்து பிரதான வீதியை நோக்கி நடந்தார்கள்.
ஓரிருவரைத்தவிர மற்றவர்கள் அயலூர்க்காரர் மாதிரித் தெரிந்தார்கள்.
நாலைந்து ஆண்களும் இரண்டு பெண்களும் மூன்று சிறுவர்களும்.
ஒருபெண் தன் கைக் குழந்தையை மார்போடு அணைத்தபடி தயங்கித் தயங்கிப் போய்க்கொண்டிருந்தாள். அவா்களது உடைகள் அவர்களது வறுமையைச் சொல்லிக்கொண்டிருந்தன. சிறுவர்களில் இருவர் என்னைப் போல அரைக்களிசான் அணிந்திருந்தார்கள். சட்டைகள் எதுவுமின்றி எலும்பும் தோலுமாய் இருந்தார்கள்.
("என்னத்தைச் செய்து குடுத்துமென்ன.. உடம்பிலை ஒரு சொட்டுச் சதையைக் காணன்.. எப்பிடித்தான் இவன் வளர்ந்து எப்பிடித்தான் என்னைக் காப்பாத்தப் போறானோ..?"என்று ஆச்சியை அடிக்கடி கலங்கவைக்கிற "உருவப் பொலிவு" என்னுடையது)

"ஆர் இவையள்?"-பின்னால் வந்துகொண்டிருந்த ஊர்க்காரர் ஒருவரிடம் அக்கா கேட்டா.
"அது பிள்ளை..இவையள் இந்தியாக்காரர்.. பஞ்சம் பிழைக்கவெண்டு கடல்வழியா வந்து கிழக்கூரிலை தங்கியிருந்திருக்கினம்.. ஆரோ விதானைக்கும் பொலிசுக்கும் அறிவிச்சுப் போட்டாங்கள்.. அவையள் வந்து கூட்டிக்கொண்டு போயினம்!"
"எங்கை கூட்டிக்கொண்டு போயினம்?"
"வேறை எங்கை பிள்ளை... ஊறாத்துறை (ஊர்காவற்றுறை)பொலிசிலை கொண்டு போய் விடுவினம்.. அவையள் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பிப் போடுவினம்!"
"ஏன் அனுப்ப வேணும்.. அவையள் இங்கை இருக்கலாம்தானை..?"
என் சந்தேகத்தை அவரிடம் கேள்வியாக்கினேன்.
"விசா இல்லாமல் இப்பிடிக் கள்ளத் தோணியளிலை வாறவையளை ஆரும் தங்கடை நாட்டிலை தங்கவிடமாட்டினம்."
அவர் சொல்லிக்கொண்டே அவர்களின் பின்னால் போனார்.
நான் அக்காவைப் பார்த்தேன்.
"விசா எண்டால் என்னக்கா?"
"ஒருத்தர் ஒரு நாட்டிலை தங்கிறதுக்கு அனுமதி!" என்றா அக்கா.
எனக்குப் பாதி விளங்கியும்பாதி விளங்காமலும் இருந்தது.
"ஏன் அக்கா.. இவையள் இந்தியாக்காரர் எண்டால் இவையளும் தமிழாக்கள்தானை...தமிழாக்கள் இருக்கிற இடங்களிலை தமிழாக்கள் இருக்கலாம்தானை..?"
"இருக்கலாம்தான்..ஆனா அரசாங்கம் அதுக்கு ஓம்படவேணும்!"
எனக்கு விபரம் சரியாகப் புரியவில்லை.
"ஓ.. அப்பிடியா..!" என்றேன் புரிந்தவன்போல்.
"பாவங்கள் அக்கா..கடலுக்குள்ளை எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்குங்கள்.. அதுகும் சின்னப் பிள்ளையளோடை.. தோணியில வாறதெண்டால்..?அதுகளுக்கு அவையளின்ர ஊரிலை எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும்.. இப்பிடிக் கடலுக்குள்ளால வாறநேரத்திலை தப்பித்தவறி தோணி தாண்டிட்டால்..?"

அன்றிரவு முழுதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை...
ஆச்சியிடம் சொல்லிச் சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். "பாவங்கள் ஆச்சி... அதுகளை எங்கடை ஊருக்குள்ளையே இருக்கவிட்டிருக்கலாம்.. கள்ளரைப் பிடிக்கிறது மாதிரி பிடிச்சுக்கொண்டு போயினம்...!"
என்னைத்திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போன அந்தச் சிறுவனின் முகம் கண்ணுக்குள்ளேயே நின்றது.
நான் வாசிக்கிற கதைகளில் வருகிற பாத்திரங்களெல்லாம் வசதியான அல்லது நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் வயிற்றுப்பாட்டுக்கும் வழியில்லாமல் உயிரைத் துச்சமாக மதித்து கடல்தாண்டிப்போய் அல்லல்படுகிற "கள்ளத்தோணிகள்" என்று அவமானப் படுத்தப்படுகிற பாத்திரங்களும் ஏராளமாக இருக்கிறார்களே.. இவர்களைப் பற்றி யாரும் எழுதுவதில்லையே..!

சில மாதங்களுக்குப் பிறகு -
எனது கையில் ஒரு நாடகநூல் கிடைத்தது.
நூலின்தலைப்பு -
"கள்ளத்தோணி"
தோட்டத் தொழிலுக்காக வெள்ளைக்காரன்களால் தமிழகத்திலிருந்து கூட்டிவரப்பட்டு மலைக்காடுகளை வளப்படுத்தி மலைநாடு ஆக்கிஇலங்கைத் தீவை வளம்கொழிக்கும் பூமியாக மாற்றியபின்னும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கள்ளத்தோணிப் பட்டம் மறையாதிருந்ததையும் ஆதிக்க சக்திகளால் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் கோடிட்டுக்காட்டுகிற நாடகம் அது.
அந்த ஒரு நாடகத்தின்மூலம் தமிழர்களின் வாழ்வை வேறோர் தடத்தில் எனக்குக் காட்டியவர்-
எம்.ஏ.அப்பாஸ்.
கள்ளத்தோணி மூலம் என் உள்ளக்கேணியில் உலாவருகிறார் அவர்.
-சின்னாச்சியின்ரமோன்