Sonntag, 30. September 2007

கதை சொன்னவர்கள்!





















"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா!
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு..."

-அதிகாலையில் ஒலிபெருக்கிவழியாக துயில் எழுப்பும் எம். எம். தண்டபாணி தேசிகரின் கணீா்க்குரல்.


திருவிழாக்காலங்கள்..
கண்ணகி கோயிலின் முற்றத்துப் பந்தற்கால்களில் உயரக் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி வழியாக தேவார திருவாசகங்கள் ஊருக்குள் உலாவந்துகொண்டிருக்கும்.

இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தபோதும் தூங்காமல் கண்களை மூடிக்கொண்டு இசையை இரசித்துக் கிடப்பதில் ஒரு சுகம்.
அதில் ஒருபோதும் சலிப்பு வந்ததில்லை.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்,கே.பி.சுந்தராம்பாள் என்று பக்திப்பாடல்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில்தேவார திருவாசகங்களோடு வந்த தண்டபாணி தேசிகரின் குரலில் மனமும் சற்று ஆழமாகவே மூழ்கிக் களித்தது.

என் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த கலட்டிப் பிள்ளையார் கோயிலில் பங்குனித் திங்களில் உற்சவங்கள் நடக்கும். 7ம் திருவிழா அப்பு(அப்பா)வினதும் அவரது உடன் பிறப்புக்களினதும் உபயமாக இருந்தது.

முன்பெல்லாம் கண்ணகி அம்மன் கோயில் திருவிழாக்களில் அயலுார்களிலிருந்தெல்லாம் மேளக்கச்சேரி, பொம்மலாட்டம், கதாகாலாட்சேபம் என்று கலை நிகழ்வுகளோடு ஆலயத்திருவிழாக்கள் அமர்க்களப்படும்.
பின்னாட்களில் இந்தக் கூத்துக் கும்மாளங்கள் கோயில் திருவிழாக்களுக்குக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும். ஆனால் மேளக்கச்சேரிகளும் கதாப்பிரசங்கங்களும் தொடர்ந்து நடைபெற்றன.

அப்பாவுக்கு ஆடம்பரத் திருவிழாக்கள் பிடிப்பதில்லை.
எனக்கென்னமோ இந்தக் கலைநிகழ்வுகள் இருந்தால்தான் திருவிழாக்களுக்கு சிறப்பு என்பதைப்போல் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

"இண்டைக்குத் திருவிழாவிலை என்ன விசேசம்?" என்று ஆராவது கேட்டால், இத்தனைகூட்டம் மேளக்கச்சேரி என்றோ இன்னாரின் நாட்டியம் என்றோ இன்னாரின் கதாப்பிரசங்கம் என்றோ "நோட்டீஸ்" அடித்துக் காட்டுவதில் பெருமைப்படுகிற திருவிழாக்காரரைப் பார்க்கையில் சந்தோசமாக இருக்கும்.

"திருவிழா எண்டால் இப்படி இருக்கவேணும்!" என்பேன்.
"அப்புவுக்கு இதெல்லாம் பிடிக்காது.. இப்ப அவரின்ரை விருப்பப்படி நடக்கட்டும்.. நாங்களும் திருவிழாச்செய்கிற காலத்திலை இந்தியாவிலையிருந்து சீர்காழியைக் கூப்பிடுவம்!" என்று சொல்லிச் சிரிப்பார் என் பெரியண்ணா.

1960களில்-
கலட்டிப் பிள்ளையார் கோயிலின் எங்கள் திருவிழா நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

"இண்டைக்கு எங்கடை திருவிழாவிலை ஒரு விசேசம்!"
"என்ன"
"இண்டைக்கு இரவு கதாப்பிரசங்கம் இருக்குது!"
"ஆர்.. திருமுருக கிருபானந்தவாரியாரோ?"
"இல்லை..திருமுருக நல்லதம்பி!"
"ஆர்..?"
"அவர்தான்ரா எங்கடை நல்லதம்பி மாமா!"

ஆச்சரியமாக இருந்தது.
இரத்தினபுரியிலோ எங்கோ கடை முதலாளியாக இருக்கிற எங்கள் மாமா (என் தாயின் தம்பி) கதாப்பிரசங்கமும் செய்வாரா?
"இரத்தினபுரியிலை இருக்கிற ஒரு கோயில்லை மாமா ஒருமுறை கதாப்பிரசங்கம் செய்தபோது அங்கை வந்திருந்த திருமுருக கிருபானந்தவாரியாரே அவருக்கு திருமுருக நல்லதம்பி எண்டு பட்டம் குடுத்தவராம்!"
-கேட்டபோது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

கலைகள் என்பது வெறுமனே எங்கிருந்தோ இறக்குமதியாகிற விடயமல்ல. அது ஒவ்வொருவர் மனதிலும் ஊற்றெடுக்கிற உணர்வுகளின் பிரதிபலிப்பு. கலைகளின்பால் அதீத பற்றுதலும் அதற்கென அயராது உழைத்தலும் ஒருவனைப் பிரபலமாக்கிவிடுகிறதே தவிர, ஏராளமான கலைஞர்கள் உலகின் எல்லா மூலைகளுக்குள்ளும் நடமாடிக்கொண்டுதானிருக்கிறார்கள் என்ற உண்மை மாமாவின் உருவத்தில் எனக்கு வெளிப்பட்டது.

ஏடுகளில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற கதைகளைவிட முன்னைய காலங்களில் கதாகாலாட்சேபம் போன்ற நிகழ்வுகள்மூலம் பரவலான கதைகள் ஏராளமாக இருந்திருக்கவேண்டும். 
வாரியார் சுவாமிகளைப்போன்று என் மாமாவைப்போன்று எத்தனை ஆயிரக்கணக்கான கதாசிரியர்களை தமிழ் எழுத்துலகம் சந்தித்திருக்கும்.
எழுத்துவடிவில் அவை இடம்பெறாதபோதும் பலரது செவிவழி புகுந்து அவர்களது மனங்களில் அவை நிலைபெற்றிருக்கும் என்பதுமட்டும் நிச்சயம்.


இளம்வயதிலேயே அவர் மறைந்துவிட்டாலும் அவரது கம்பீரமான அந்தக் குரலும் அவரது கதாப்பிரசங்கமும் இப்போதும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

"உங்கடை மச்சான் எண்டதாலதான் நல்லதம்பியின்ர கதாப்பிரசங்கத்துக்கு உங்கடை திருவிழாவிலை இடம் கொடுத்தனீங்களே?" என்று யாரோ அப்பாவைக் கேட்டார்கள்.

"மச்சான் எண்டதால இல்லை. கதாப்பிரசங்கத்திலை கெட்டிக்காரன் எண்டதாலை!" என்றார் அப்பா.



-சின்னாச்சியின்ரைமோன்.

Donnerstag, 5. Juli 2007

நான் பேச நினைப்பதெல்லாம்...









"உனக்கு இராமாயணம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"சீதையை இராவணன் சிறையெடுத்ததும், பிறகு இராம இராவண யுத்தம் நடந்ததும்!"
"இன்னொரு சம்பவம்!"
"சீதை தீக்குளித்தது!"


"உனக்கு மகாபாரதம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"பாஞ்சாலி சபதம்!"
"கொஞ்சம் விளக்கமாச் சொல்லு!"
"தருமர் சூதாட்டத்தில் திரெளபதியைப் பணயம் வைத்துத் தோற்றதும், துச்சாதனன் துகிலுரிந்ததும், அவனுடைய இரத்தத்தைப் பூசித்தான் கலைந்த தன் கூந்தலை முடிப்பேன் என திரெளபதி சபதம் எடுத்ததும், பிறகு நடந்த பாரதப் போரும்!"


"சிலப்பதிகாரம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான சம்பவம்!"
"கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியைத் தேடிப்போனது!"


ம்.. இப்படித்தான்...
எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் மனிதனுடைய தவறுகளும் பலவீனங்களும்தான் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.
அவைகளிலிருந்து அவன் மீண்டுவிட்டால் அத்தோடு கதையும் முற்றுப் பெற்றுவிடுகிறது.
குற்றம் கண்டுபிடிப்பதும் குறைசொல்வதும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகாட்டுவதும் என்றே எல்லாக் கதைகளும் வளர்த்துச் செல்லப்படுகின்றன. இயல்போடு ஒத்ததான எல்லாக் குணாதியசங்களும் எல்லா மனிதர்களிடத்தும் இருக்கின்றன.
சிலரிடம் சில குணாதிசயங்கள் மிகுதியாய்த்தெரிகிறபோது அவர்கள் மற்றவர்களது கவனிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.



இந்த உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்டகாலமாயிற்று.
எல்லோரையும் நல்லவராகவே பார்த்து வளர்ந்த கண்களுக்கு ஆங்காங்கே சிலரது குறைபாடுகள் தெரியத் தொடங்கியபோது முற்றிலும் புதிதான வேறோர் உலகத்துக்கு வந்துகொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.


வானொலி வழியாக வந்த பாடல்களில் பெரும்பாலானவை காதலையே அடிநாதமாகக் கொண்டு ஒலித்தபோதும் வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் அவை எடுத்துவரத் தவறவில்லை.


கவிதைகள் பற்றி அவ்வளவு ஆர்வமில்லாத ஒரு பருவத்தில் பாடல்களை அதிகமாய் இரசிக்க முடிந்திருந்தது.
கவிதைகளும் பாடல்களும் ஒன்றா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பாடல்களுக்குள் கவிதைகள் இருந்தன.

கவிதைகளுக்குள்ளும் பாடல்கள் இருந்தன என்று எனக்குக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

அவர் திரைப்படங்களுக்கு எழுதிய சில பாடல்கள் ஒரு தொகுப்பாக என் சின்னவயதில் எனக்குக் கிடைத்தபோது அதில் ஆழ்ந்து போனேன்.

வார்த்தைகளால் தமிழுக்கு வண்ணம் சேர்த்த கலைஞர் கருணாநிதிபோல் பாடல்களால் தமிழுக்கு அழகுசேர்க்க வந்தவன் நான் எனத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார் கண்ணதாசன்.

திரைப்படப் பாடல்கள் எல்லாமே கவிதைகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. கவிநயமில்லாத அல்லது கவிதையே இல்லாத இரண்டு வசனங்களை எழுதி அதற்கு இசையமைத்து அதை ஒரு பாடலாக மாற்றிவிடமுடியும்.

ஆனால் எழுதிய பாடல்கள் எல்லாமே கவிதைகளாக உருப்பெற்றிருந்த விந்தையை கண்ணதாசனிடம் கண்டேன்.

என் சிறுவயதில் என் மனதில் இடம் பிடித்துக்கொண்ட கவியரசு கண்ணதாசன் இங்கே இன்னும் நிரந்தரமாகக் குடியிருக்கிறார்.


-சின்னாச்சியின்ரமோன்

Samstag, 23. Juni 2007

அரும்பு மீசை




வாழ்க்கை என்பது ஒன்று போலத் தோன்றினாலும் உண்மையில் அது இரண்டு.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒருமுறைதான் வாழ்கிறோம் என்பதில் உண்மையில்லை.
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை.
அகத்திலும் புறத்திலுமாய் ஒரு சமயத்தில் இருவேறுபட்ட வாழ்வை ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
உயிர்கொண்ட உடல் வாழும் வாழ்க்கை என்பது ஒன்று.
இந்த உடலுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் மனம் வாழும் வாழ்க்கை என்பது மற்றொன்று.
ஒவ்வொருவரும் நினைத்தபடி வாழ முடிவதில்லை என்பது ஒரு வாழ்க்கை. நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு வாழ்க்கை.
எதைப்பற்றியும் கவலைகொள்ளாத வயதுகளைக்கடந்து ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிற பருவத்துக்கு வந்தாயிற்று.
மேலுதட்டின்மீது மெள்ள அரும்பும் மீசை.
யாரும் அறியாமல் வலது கைப் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் மேலுதட்டை மெள்ள வருடுகையில் அரும்பு மீசையின் மென்மையில் ஆண்மையின் வன்மை துளிர்ப்பது தெரிகிறது.
உனக்குள் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று உணர்த்துகிறது காலம்.
"நான் இப்ப சின்னப் பெடியன் இல்லை... நானும் வளர்ந்திட்டன்!" என்று நினைக்கும்போது எனக்குள்ளே இன்னொருவனைக் காண்கிற வியப்புடன் கூடவே ஒருவித பெருமிதமும் மனதில் வந்து ஒட்டிக்கொள்கிறது.
மேலுதட்டில் மீசையும் கீழுதட்டில் பீடியுமாய் என் வயதொத்த பெடியன்கள்.

அப்போதைய சூழ்நிலையில் நான் படித்த கதைகள், கேட்ட பாடல்கள் பலவும் காதல் தோல்வியைச் சொல்லி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன.
"காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கலங்குகிறான் அவளை நெஞ்சில் இருத்தி!" என்று ஏ.எம்.ராஜா வானொலிப்பெட்டிக்குள் அடிக்கடி அழுது கொண்டிருந்தார்.
"ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்.. கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடமேதடா" என்று மறுபக்கத்தில் கண்ணதாசன், செளந்தரராஜனின் குரலில் தவித்துக் கொண்டிருந்தார்.
கனவுக் காதலியோடு சோகம்கலந்த சுகமான ஒரு தனிமையில் உறவாடும் அரும்புமீசைப் பருவத்தில் என் கையில் கிடைத்த ஒரு நவீனம்-
அகிலனின் "பாவை விளக்கு!"
தொடர்கதையாக வந்த பெரும்பாலான கதைகளை வார இதழ்களிலிருந்து தனித்தனி அத்தியாயங்களாகச் சேகரித்து முழுமையான நவீனங்களாக உருவாக்கி புத்தகங்களாகச் சேகரிக்கும் பழக்கம் என் சின்னண்ணாவிடம் இருந்தது. ஒவ்வொரு தடவையும் அவர் ஊருக்கு வரும்போதும் சில புத்தகங்களுடன்தான் வருவார்.
எல்லாம் அழகாகக் கட்டப்பட்டு, தடித்த அட்டைகளுடன், முகப்பில் வார இதழ்களை அலங்கரித்த அந்தந்தக் கதைகளின் வண்ணப்படங்களைத் தாங்கி அழகாகக் காட்சிதரும் புத்தகங்கள்.
பாவை விளக்கும் அப்படித்தான் வந்தது.
தனது நண்பனொருவனின் கதையை மூலமாக வைத்து அதை அகிலன் எழுதியதாக முன்னுரையில் அவர் எழுதியிருந்ததாய் ஞாபகம்.
"இது அவரின்ரை கதைதான். சும்மா தன்ர கூட்டாளி எண்டு சொல்கிறேர்!" என்றா அக்கா.
எது எப்படியோ எந்தக் கதைக்கும் மூலமாக எவராவது இருந்தாகவேண்டும்.

பாவை விளக்கைப் படிப்பதற்கு முன்-
எனது கற்பனையில் வந்துகொண்டிருந்தவளைக் கதாநாயகியாகவைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.
"சாந்தி என் தங்கை!" கதையின் தலைப்பு.
ஒரு இளைஞனின் ஒருதலைக் காதலைச் சொல்லும் கதை.
கதையை எழுதினாலும் யாரிடமும் காட்டாமல் மறைத்தே வைத்திருந்தேன்.
சின்னண்ணாவின் பார்வையில் அது பட்டுவிட்டது.
அவர் வாசித்து முடித்ததும் தயக்கத்துடன் கேட்டேன்:
"கதை நல்லமா அண்ணை?"
அவர் புன்சிரிப்புடன் "ம்...ம்...!"என்றார்.
(நல்லகாலம் என்ர "கதாநாயகி"யைப் பற்றி அண்ணைக்கு விளங்கேல்லை)
"பேப்பருக்கு அனுப்பினால் போடுவாங்களா அண்ணை?"
"அனுப்பிப் பாரன்.. பிடிச்சிருந்தால் போடுவாங்கள்!"
"பிடிக்காட்டில்..?"
"எதுக்கும் அனுப்பிப் பார்!"
ஆனால் நான் அதை அனுப்பவில்லை. தயக்கம்.
"அந்தக் கதையை அனுப்பி அது பேப்பரிலை வராட்டில்...என்ர கதாநாயகி பாவம்! அவள் என்னட்டையே இருக்கட்டும்!"என்று நினைத்துக் கொண்டேன்.
அந்தக் கதைக்கு அங்கீகாரம் கிடைக்காதுவிட்டால் அது என் கதாநாயகிக்கே அங்கீகாரம் கிடைக்காததுமாதிரி..
அவளுக்கு ஒரு இழுக்கு ஏற்பட நானே காரணமாவதா?வேண்டாம்..(இன்றுவரை அந்தக் கற்பனைக் கதாநாயகி என்னுள்ளேதான் இருக்கிறாள். "என்னைப் போல ஒருத்தியை நீ உன் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாது!" என்று எப்போதாவது கனவில் வந்து சிரித்துப் போகிறாள்.)

பழைய எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கதாநாயகர்களுக்கான தொழிலாக எழுத்தையே தேர்வுசெய்வது ஏன் என்பது எனக்குப் புரியாவிட்டாலும் எல்லாக் கதாநாயகர்களையும்விட எழுத்தாள கதாநாயகர்களே உயர்ந்தவர்கள் என்பதாக அப்போது எனக்குத் தோன்றியது.
அகிலனின் பாவை விளக்கு கதாநாயகனும் ஒரு எழுத்தாளனாகவே இருந்தான். அதனாலோ என்னவோ அந்தக் கதாநாயகன்மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது.
அகிலன் முன்னரும் ஏராளமாக எழுதியிருந்தார் எனினும் நான் வாசித்த அவரது முதல் கதை பாவைவிளக்கு.
கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் பின்னர், அகிலனின் வேங்கையின் மைந்தன், கயல்விழி ஆகிய சரித்திர நவீனங்களும் என்னை ஈர்த்துக் கொண்டன.
அவரது புதுவெள்ளம் தொடர்கதையாகவே வாசித்தேன்.

கையில் எடுத்துக் கொண்டால் முழுதுமாக வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்கத்தூண்டும் எழுத்துநடையை இவர் எங்கிருந்து கற்றாரோ என்ற வியப்பையே அவரது கதைகளில் உணர்ந்தேன். பெரும்பாலான கதாபாத்திரங்களோடு நாமும் சேர்ந்து வாழ்கிறோம் என்பதுபோன்ற ஒரு அனுபவத்தை அவரது எழுத்துக்கள் தந்தன.
அகிலன் எனக்குள் இடம்பிடித்துக்கொண்டார்.

-சின்னாச்சியின்ரமோன்.

Dienstag, 12. Juni 2007

கிணற்றுத் தவளையும் புதிய உலகமும்



பரந்த இந்த உலகம் பற்றி அதிகம் அறியாத அல்லது அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத பருவம் அது.


என்வரையில் என் சின்னக் கிராமமே என் உலகம்.

அன்றாட வாழ்க்கையில் அமைதியாய் பொழுதுகளைக் கழிக்கின்ற மனிதர்களே என் உலகத்தில் நிறைந்திருப்பதாய் அப்போது உணர்ந்திருந்தேன்.

(திரையரங்கோ காவல்நிலையமோ என் ஊருக்குள் இருந்ததில்லை என்பதே அதன் சிறப்புக்குப் போதுமான அத்தாட்சி)

பந்தபாசங்கள் நிறைந்த, எதிர்க்கருத்துக் கொண்டவர்களையும் இன்முகத்தோடு வரவேற்ற, சாதி மத பேதங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் நேசிக்கின்ற, அன்பு பாராட்டுகின்ற மனிதர்களே அடிக்கடி என் கண்களில் எதிர்ப்பட்டார்கள்.


இந்த அன்புலகத்தில் வாழ்ந்தபோதும் இதுமட்டுமே உலகம் அல்ல என்றும், இந்தச் சின்னக் கிராமத்துக்கும் அப்பால் பிரமாண்டமானதும் இந்தக் கிராமத்து மனிதர்களிடத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான மனிதர்களைக் கொண்டதுமான ஓர் உலகம் இருக்கிறது என்றும் எனக்குக் கற்பித்தவை பெரும்பாலான கதைகளே.

ஒவ்வொருவருடைய கதைகளுக்குள்ளும் நடமாடும் கதாபாத்திரங்கள், அவர்களது அனுபவங்கள், என் கிராமத்திலிருந்து விலகி வேறோர் உலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றன.


சஞ்சிகைகளில் வெளியான அனேகமான கதைகள் "யாவும் கற்பனை" என்று அடிக்குறிப்பிட்டு வந்தன.

"இந்த இதழில் இடம்பெறும் கதைகள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!" என்று குறிப்பிடுவதன்மூலம் அந்தக் கதைக்கும் அந்தக் கதை தரக்கூடிய பிரச்சனைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று அவை விலகியோடிக்கொண்டிருந்தன.

படைப்பாளர்களே கதைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டி இருந்ததால் உண்மைக்கதை எழுதுபவர்களும் தத்தம் கற்பனைகளைக் கலந்து அது உண்மை என்று தெரியாதவாறு மறைத்துக் கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் கதாபாத்திரங்களுக்குள் தத்தம் குணாதிசயங்களைக் காணும் வாசகர்கள் சிலர் இது உண்மைக்கதைதான் என்று தமக்குள் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆக ஒவ்வொரு கதையினது கதாபாத்திரங்களும் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழவே செய்தார்கள்.


கதைகளை வாசிக்க வாசிக்க அந்தப் பாத்திரங்களோடு ஒன்றித்துப் போகவும் வாசகர்கள் பழகிக்கொண்டார்கள்.

ஒரு பிரபலமான சிறுகதையிலோ நாவலிலோ வரும் ஒரு கதாபாத்திரம் தங்கள் மனதில் நீங்காதிருப்பதாக ஒருவாசகர் சொல்லும்போது அந்தக் கதாபாத்திரமும் இந்த உலகத்தில் உயிருடன் நடமாடுவது போன்ற ஒர் உணர்வை உருவாக்கிடுகிறது.

என் இளயவது வாசிப்பு அனுபவத்தில் நான் சந்தித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் எல்லோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

தமிழ்க் கலை இலக்கியத்தில், ஈழத்துக் கலை இலக்கியம் என்று ஒன்று தனியாக இருக்கிறது என்று எனக்குப் புரியாத வயது அது.

என்றென்றும் தமிழகமே தமிழ்க் கலை இலக்கியத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் என்பதே உண்மை என்றானபோதும் நமக்கென்றும் ஓர் தனித்துவம் உண்டு என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

கிணற்றுத் தவளைபோல் என் கிராமமே உலகம் என்று நான் கருதிக் கொண்டிருந்தாலும் இந்த எனது உலகத்துக்குள் முழுத் தமிழகமும் இருந்தது.


எழுத்துக்களாய் உலாவந்த படைப்பாளர்களும், பாடல்களாய் ஒலித்துக்கொண்டிருந்த கவிஞர்களும் பாடகர்களும், இசைத்தட்டுக்களில் வசனம் பேசிக்கொண்டிருந்த நடிகர்களும் என்று எனது உலகத்தில் தமிழகத்தை இணைத்துவிட்டிருந்தார்கள்.

உலகம் புரிய ஆரம்பித்திருந்தது.

வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து இந்தியாவும் இலங்கையும் விடுபட்டபிறகுதான் நான் பிறந்திருந்தேன்.

சுதந்திரப் போராட்டத்தின் பின் விடுதலைபெற்ற அன்றைய தமிழகம் எப்படியிருந்தது என்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.


பத்துப்பன்னிரண்டு வருடங்கள் கடந்தபிறகு எங்கள் வீட்டுப் பாட்டுப் பெட்டியில் (கிராமபோன்) ஒலித்த பராசக்தி இசைத்தட்டில் சிவாஜிகணேசன் என்ற நடிகரின் வாய்மூலமாக கலைஞர்மு.கருணாநிதி என்றபடைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு அகதித் தமிழனின் உள்ளக் குமுறல் வெளிப்படுவதைக் கேட்டபோது தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும் என்று எனக்குள் ஒரு படம்விரிந்தது.


(தமிழாக்கள் பாவம்...! சுதந்திரம் கிடைச்சும் சந்தோசமாய் இருக்கமுடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகுதுகள்! )



மு.கருணாநிதி என்ற அந்த அற்புதமான படைப்பாளியின் அழகுதமிழில் இலயித்துப்போன மனம் அவரைப்போல வார்த்தைகளைக் கையாளவேண்டும் என்ற ஆசையை என்னுள் வளர்த்தது.

மு.கருணாநிதி என்ற அந்தப் படைப்பாளி திரைத்துறை சார்ந்த கலைஞர்களில் ஒருவர் என்றும் திரைப்படங்களுக்குமட்டும் கதைவசனம் எழுதுகிறவர்போலும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.






-சின்னாச்சியின்ரமோன்



Sonntag, 3. Juni 2007

அன்பே சிவம்


 
















1960களின் முற்பகுதி...
ஏழாம் வகுப்பு.
தமிழ்ப் பாடநேரம் முடிந்த இடைவேளை.
தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்த இளைஞரான அந்த ஆசிரியரின் முன்னால் போய் நிற்கிறேன்.
கையிலிருந்த ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டுகிறேன்.
"என்ன..?"
"இது உங்களுக்குத்தான் மாஸ்ரர்... கடிதம்!"
(இராஜேஸ்வரி வித்தியாசாலையில் வாத்தியார். மகாவித்தியாலத்தில் மாஸ்ரர்.)
"கடிதமா.. எனக்கா..? ஆர் தந்தது?"
" இது நான் எழுதின கடிதம்!"
-அவர் ஆச்சரியத்தோடு, ஆனால் வழக்கமான அவரது அழகான சிரிப்போடு என்னைப் பார்த்தார்.
கடிதத்தை அவர் பிரிக்கும்போது நான் திரும்பவும் போய் எனது இருக்கையில் உட்கார்ந்துகொள்கிறேன்.
சக மாணவ மாணவிகள் என்னைப் பார்க்கிறார்கள்.
எனது கடிதத்தைப் படித்துவிட்டு அவர் தரப்போகும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.
கடிதத்தைப் படித்தவர் அதைத் திரும்ப மடித்தபடி என்னைப் பார்க்கிறார்.
" எதற்காக எனது அனுமதி வேண்டும். உங்களது விருப்பப்படியே செய்யலாமே!"
" இல்லை மாஸ்ரர். ஏற்கனவே இளைஞர் மன்றம் எண்டு ஒண்டை நீங்கள் உருவாக்கியிருக்கிறீங்கள்.. நாங்கள் சின்னப்பெடியள்.. எங்களுக்கெண்டு ஒரு மன்றத்தை நாங்கள் உருவாக்கிறபோது உங்களிட்டையும் அனுமதி கேட்கவேணுமெண்டு நினைச்சம்.! அதுதான்!"
" அதை வாயாலேயே கேட்டிருக்கலாமே.. ஏன் கடிதம்?"
" நேரடியாகக் கேட்க ஒரு மாதிரியிருந்துது அதுதான்!"
" சரி.. உங்கடை விருப்பப்படியே நடத்துங்கோ! ஆனா வாலிபர் மன்றம் எண்டு போடாமல் சிறுவர் மன்றம் எண்டு போடுங்கோ!"
என்னதான் எங்களை நாங்கள் சின்னப் பெடியள் என்று சொல்லிக் கொண்டாலும் "வாலிபர் எண்டு போடாதேங்கோ!" என்று ஆசிரியர் சொன்னதும் மனதுக்கு ஒருமாதிரித்தான் இருந்தது.
சிறுவர் என்று போட மனம்வராமல் அதைப்பற்றி அவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இளந்தமிழர் மன்றம் என்று பெயரைப் போட்டுக்கொண்டோம்.
இளந்தமிழர் மன்றம் என்ற ஒன்றை உருவாக்கி கூடப் படிக்கும் அயல்நண்பர்களுடன் "கலைப்பணி"க்கு அத்திவாரம் இட்டாயிற்று. கண்ணகியம்மன் கோயில் தண்ணீர்ப் பந்தலைக் காரியாலயமாக்கிக் கொண்டோம்.
மகன் கொஞ்சம் அறிவு பூர்வமான காரியங்களில் ஈடுபடுகிறான் என நினைத்தோ என்னவோ அப்பா இப்போது தன் கட்டுப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்.
மன்றத்தை உருவாக்கிவிட்டு சும்மா இருக்க முடியாது என்று நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம்.
"ஈழநாட்டு வேந்தன்!" என்று தலைப்பிட்டு ஒரு நாடகம் எழுதினேன்.
அதை மேடையேற்றியது சுவையான அனுபவமாக இருந்தது.
நாடகம் எழுதுவதற்கான முதல் உற்சாகம் எனக்கு ஏற்படக் காரணமாயிருந்தது எது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறபோது என் மனக்கண்ணில் வந்து நிற்கிற முகத்துக்குரியவர் நான் மேலே குறிப்பிட்ட எனது ஆசிரியர்தான். 

அவர் மேடையேற்றிய "வாழ்வுப்பலி" என்ற நாடகம் என் மனதில் நிரந்தரமாகப் பதிந்துபோயிருக்கிறது.
திரைப்படங்களின் ஆதிக்கமற்ற ஊரில் நாடகங்கள் வரவேற்புப் பெற்றிருந்தன எனினும் அந்தக் காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்துதான் கலைஞர்கள் வந்து நாடகங்களை மேடையேற்றிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
"வாழ்வுப்பலி" நாடகத்தைப் பார்ப்பதற்கு முன் -என் பதின்ம வயதுகளின் தொடக்கத்தில்- யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கலைஞர்களால் மேடையேற்றப்பட்ட ஒரேயொரு நாடகத்தைப் பார்த்திருக்கிறேன்.
"உதயசூரியன்" என்பது நாடகத்தின் பெயர் என்பதாக ஞாபகம்.
சரித்திர நாடகம் எனினும் சமூகப் படப் பாடல்களை அதில் இணைத்திருந்தார்கள்.
"எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?"
"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!" போன்ற பாடல்களை அவர்களே பாடி நடித்தார்கள்.
அவர்களைச் சினிமா நடிகர்கள்போல் நான் கற்பனை செய்திருந்தேன்.
அவர்களை மறுபடி பார்க்கவேண்டும் போல் ஆவலாகக் கூட இருந்தது அந்தவயதில்.

இந்தநேரத்தில் வாழ்வுப்பலி அற்புதமான சமூக நாடகமாக எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்த நாடகத்தின்மூலம் என் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட என் ஆசிரியர்-
திரு.ஐ.சிவசாமி அவர்கள்.

என்வரையில் அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குத் தோன்றினார். கலைத்துறையிலும் எழுத்துத்துறையிலும் அவர்காட்டிய ஆர்வம் என்னுள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
நேரடியாக அவரது கலைப்பணிகளில் நான் பங்கு கொள்ளாவிட்டாலும் அவர் எனது நினைவுகளில் நிரந்தரமாக இருக்கிறார்.ஆரவாரமற்று அமைதியாகக் கலைப் பணிபுரியலாம் என்ற குணாதிசயம் அவரிடமிருந்து மானசீகமாக நான் கற்றுக்கொண்டது.
வாழ்வுப் பலி நாடகம் பற்றி இங்கு நான் சொல்ல வந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு.
அந்த நாடகத்தின் கதாநாயகனான இளைஞன்-
ஒருநாள் எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தார்.
கைகளில் சில நூல்களை வைத்திருந்தார்.
அவரே எழுதிய நூல் அது என்றும் அதை ஆசிரியர்களுக்கு விநியோகிக்க வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டேன்.
நூலின் தலைப்பு -"ஈழத்துச் சொற்செல்வர்கள்"
நூலின் படைப்பாளர்
- ஈழத்துச் சிவானந்தன்.

அவரை ஒரு நடிகனாகமட்டுமே நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் ஒரு எழுத்தாளர் என்று அறிந்ததும் அவர்மீது ஒரு மதிப்பு வந்தது.
எங்கள் ஊர் எழுத்தாளர் என்று என் சின்னவயசில் என்னால் முதன்முதலாக அறிந்துகொள்ளப்பட்டவர்- இன்று புலவர் ஈழத்துச் சிவானந்தன் என்று திகழும் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள்.

-சின்னாச்சியின்ரமோன்



Freitag, 25. Mai 2007

பேய்க்கதை கதைத்தவர்கள்


கனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை.
இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் எப்படியும் வாழலாம் என்பதாய்ப் பலரும் வாழ்நாட்களை விரட்டிக் கொண்டிருந்தாலும் எப்படியோதான் கழிந்துபோகிறது காலம்.
சுமைகள் எதுவும் சுமக்கவேண்டிய அவசியமில்லாத அல்லது அந்தச் சுமைகளை மூத்தவர்கள் சுமப்பார்கள் என்ற நிலையில் இளமைப்பருவம் இனிமையாகவே கழிந்துபோகிறது.
சின்னச் சின்ன ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் பள்ளிப்பருவத்தில் வரும்போதும் அவை உடனுக்குடன் தீா்க்கப்பட்டுவிடுவதால் கவலைகள் ஏதுமின்றி எதிர்காலம் என்ற இனிய கனவுக்குள் மனம் புகுந்துகொள்கிறது.

"நல்லாப் படிக்கவேணும்!"
"படிச்சிட்டு..?"
"நல்ல உத்தியோகம் பார்த்து நல்லா உழைக்க வேணும்!"
"அதுக்குப்பிறகு...?"
"அதுக்குப்பிறகு என்ன.. எல்லாரையும்போல கலியாணம் முடிச்சுக்கொண்டு பிள்ளை குட்டியளைப் பெத்துக்கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதான்.!"
வளர்ந்து விட்டால் சந்தோசங்கள் பறிபோய்விடும் என்கின்ற உண்மை புரியாத வயது அது.
அந்த வயதில் அப்படித்தான் கனவுகாண முடியும்.

வாழ்க்கை எப்போதும் நிரந்தரமானது என்ற மாயைத்திரையை விலக்காமல் வாழ்க்கை நாடகத்தின் காட்சிகளை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தவரை அது இனிமையாகத்தான் இருந்தது.
எல்லோர் வாழ்க்கையும் ஒருநாள் முற்றுப்பெறும் என்ற இயற்கையின் விதியை மிகச் சிறியவயதில் எனக்குக் காட்டியது என் அப்பாச்சியின் மரணம்.
அதற்கு முன்னும் சில மரணங்கள் நிகழ்ந்திருந்தன எனினும் அவைகள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.
ஒப்பாரிகளும் ஓலங்களும் பறைமேளச் சத்தமும் பாடைகளும் என்று வேலிக்குப் பின்னால் நின்று பார்த்த பொழுதுகளில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் "ஆரோ செத்திட்டனமாம்!" என்பதுபோன்று அலட்சியப்படுத்துகிற வயதில் அந்த மரணங்கள் என்னிடத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக இல்லை.

அப்பாச்சிக்குப் "பந்தம்"பிடித்துக்கொண்டு நின்றதுமட்டும் இன்னும் என்னுள் முதல் மரண நிகழ்வாய் பதிந்து கிடக்கிறது.
பெரியப்பு, சீனியப்பு, அப்பு, பெரியாத்தை, சீனியாத்தை, ஆச்சி, மாமிமார் அம்மான்மார் என்று அவவைச் சுற்றி நின்று அழுதவர்களின் கண்ணீர் எல்லாரும் ஒருநாளைக்கு சாகப் போயினம் என்ற உண்மையை எனக்கு அழுத்திச் சொல்லியிருக்கவேண்டும்.
பயம்?!
அன்றைக்குத்தான் அது என்னைத் தொட்டுக்கொண்டதாக நினைவு.
அப்பாச்சியின் காரியங்கள் எல்லாம் முடிந்து அடுத்துவந்த இரவுகளில் எனக்குத் திடீர் திடீர் என்று விழிப்பு வரும்.
என் "ஆச்சி"யின் (அம்மாவின்) பாயில் அவவுக்கு இரண்டு பக்கத்திலும் நானும் தங்கச்சியும் படுத்திருந்து ஆச்சியை இறுகக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத்தூங்கிய இரவுகள் மெள்ளத் தொலைந்து கொண்டிருந்தன.
"ஆச்சி...!"
நன்றாக நித்திரை கொள்ளும் ஆச்சியை மெதுவாகத் தட்டி எழுப்பினேன்.
"என்னடா?"
"நான் வெளியிலை போகப்போறன்!"
"..ம்..போ.. போய் இருந்திட்டு வா!"
வெளியே கும்மிருட்டு.
விழித்துப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.
"எனக்குப் பயமாக்கிடக்குது!"
"பயமோ.. என்னடா இது புதுப்பழக்கம்.. என்ன பயம்..முத்தத்திலை இறங்கிறதுக்கு!"
ஆனால் முற்றத்திலிருந்து ஒரு இருபதடி தாண்டி அப்பால் இருக்கும் தென்னைமரத்துக்குக் கீழே போகவேண்டும்.

"எனக்குத் தெரியா.. எனக்குப் பயமாக்கிடக்கு.. விளக்கை எடுத்தண்டு வா!"
"ம்..ஆம்பிளைப் பிள்ளை பயப்பிடுறான் பார்...!"
தூக்கக் கலக்கத்துடன் எழும்பும் ஆச்சி அரிக்கன் லாம்பின் சுடரைத் தூண்டி அதை எடுத்துக்கொண்டு என்னோடு முற்றத்தில் இறங்கினா.
"போ.. போய் இருந்திட்டு வா!"
அமாவாசை இருட்டுக்கு அரிக்கன்லாம்பு வெளிச்சம் எந்தமூலைக்கு?
எனது நிழலே பெரிதாய் பேயுருக்கொண்டு முற்றத்து வேலியில் கூத்தாடிற்று.

இருட்டுக்குள் கண்களைச் சுழற்றி எங்கிருந்தாவது ஏதாவது வருகிறதா என்று பார்த்துக்கொண்டு அவசர அவசரமாக "ஒண்டு"க்குப்போய்விட்டு
உடல்முழுதும் சட்டெனப்பரவி மறைந்த சிலிர்ப்புடன் களிசானைப் பூட்டிக்கொண்டு ஆச்சியை முந்தியபடி வீட்டுக்குள் ஓடினேன்.
"என்னடா..வடிவா இருந்திட்டியா..?"
"இருந்திட்டன்.. ஆனா..வயித்துக்கை என்னமோ செய்யுது..!"
இது வயிற்றுக் கோளாறினால் அல்ல என்பதும் பயத்தினால் என்பதும் ஆச்சிக்குப் புரிந்திருக்கும்.
"இரு.. இஞ்சித் தேத்தண்ணி சுடவைச்சுத் தாறன்!"
"வேணாம் ஆச்சி.. நீ படு!"
ஆச்சி தூங்கிய பின்னும் அடிக்கடி எனக்கு விழிப்பு வந்துகொண்டிருந்தது.
"பிறந்தவை எல்லாரும் செத்துப்போறதெண்டால் ஒருநாளைக்கு என்ரை ஆச்சியும் செத்துத்தானே போவா?"
- பயத்தை மீறிக்கொண்டு என் கண்களில் கண்ணீர் திரண்டது.
நானும் ஒருநாள் செத்துப்போவேன் என்ற நினைப்பு அப்போதில்லை.
ஆச்சி சாகப்படாது.
புரியாத பருவத்தில் வாழ்வின் நிலையாமையை நான் உணர்ந்துகொண்டதாக நான் புரிந்துகொண்ட ஒருபொழுதில் என்னுள் ஒருவித பயம் வந்து ஒட்டிக்கொண்டது எதனால் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.
இருப்பவர்கள் எல்லோரும் ஒருநாள் இல்லாமல் போகப் போகிறார்கள் என்ற
உண்மை புரிந்ததனால் விளைந்த பயமா அது?
இறந்தவர்கள் எஙகு போகிறார்கள்?
இத்தனை காலம் இருந்தவர்கள் இப்போது இல்லையெனில் எங்கே அவர்கள்?
நிச்சயமாக அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வேறு எங்கும் போயிருக்க மாட்டார்கள்.
அப்படியானால் சிலபேர் சொல்கிறதுமாதிரி ஆவிகளாக பேய்களாக உலவிக்கொண்டிருப்பார்களா?
சரி அப்படி உலவிக்கொண்டிருப்பவர்கள் ஏன் இரவுகளில்மட்டும் வர வேண்டும்.
பகல்பொழுதின் இரைச்சல்கள் அவர்களுக்கு எரிச்சலூட்டுமோ என்னவோ!மனிதர்கள் இயக்கமில்லாமல் உறங்கும் பொழுதுகளில்தான் அவர்கள் தம்பாட்டுக்கு உலவித்திரிய முடியுமோ என்னவோ.. அல்லது தத்தம் ஆவிகளை வெளியே உலவவிட்டு மரக்கட்டைகளைப் போல உறங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவிகளோடு இறந்தவர்களின் ஆவிகள் பேசுவதற்கு இரவுதான் ஏற்ற நேரமோ என்னவோ?
வாழ்க்கை மர்மம் நிறைந்ததுதான்.
மரணம் என்னும் இந்த மர்மத்துக்கு விடைகிடைக்கும்வரை மனிதனின் அச்சமும் அவனிடமிருந்து விடைபெறப்போவதில்லை.
ஒன்றைப் பற்றித்தெரியாமல் அதைப்பற்றிப் பயப்படுவதில் அர்த்தமில்லை. பேய்களைப்பற்றி ஆவிகளைப்பற்றி ஆராவது சொல்ல மாட்டார்களா?
இப்போது என் கவனம் மா்மக்கதைகளின் பக்கம் திரும்பிவிடுகிறது.
கல்கி குமுதம் ஆனந்தவிகடன் கலைமகள் கண்ணன் கல்கண்டு அம்புலிமாமா இவற்றோடு, வண்ணத்தில் கொலை கொள்ளைக்காரர்களையும் துப்பாக்கியையும் அதற்கு முன்னால் அலறும் பெண்களின் முகத்தையும் வரைந்து வா வா என்றழைக்கும் பேய்க்கதைகள் மலிவுவிலை மர்ம நாவல்களாகப் புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்தன.
அவைகளை வாசிக்கும் வயது எனக்கு இல்லை என்பதால் அவற்றை வாங்கி பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனியாகப் போயிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இரவு நேரங்களில் பேய்க்கதை மன்னன் பிடி.சாமி பேய்களையும் கூட்டிக்கொண்டு எங்கள் வளவுத் தென்னைமரங்களுக்குக் கீழே வந்தமர்ந்தார்.
ஏற்கனவே சரியான பயங்கொள்ளி என்பதால் அவரால் என்னை நன்றாகவே மிரட்ட முடிந்திருந்தது.
அது என்னமோ அந்தப் பொழுதுகளில் பயந்து பயந்து வாசிப்பதில் அல்லது வாசித்து வாசித்துப் பயப்படுவதில் உள்ளார ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஏராளமான எழுத்தாளர்கள் அப்போது பேய்க்காட்டப் புறப்பட்டிருந்தாலும் பி.டி.சாமி என் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்.
அவருக்கென்று ஒரு தனிநடை.
தமிழால் பேய்க்காட்டுவதற்கும் ஒரு தனித்திறமைவேண்டும்.
அது அவரிடம் அதிகமாகவே இருந்தது அதனால்தான் அவர் அதிகமாக எழுதிக்குவித்தார்.
என்னைப் போன்ற அப்போதைய பேய்ப்பெடியங்கள் நிறையப்பேரை தன் பே எழுத்துக்களால் பேப்பிடி பிடிச்சுக்கொண்ட ஒரு பேய்க்காய் பி.டி.சாமிதான்.
- சின்னாச்சியின்ரமோன்.

Mittwoch, 16. Mai 2007

பக்கத்து வீட்டுக் கண்ணகி



"ஐம்பெருங் காப்பியங்கள் எவை...? நீ ..சொல்லு!"


தமிழ்வாத்தியார் என்னைப் பார்க்கிறார்.


மெதுவாக எழுந்து நிற்கிறேன்.
"சிலப்பதிகாரம்.."


சட்டென அதுமட்டும் ஞாபகம் வர சொல்லிவிட்டு தயங்குகிறேன்...




"ம்..இன்னும்..!"


"மணிமேகலை..!"


மீண்டும் தயக்கம்


"ம்..!"


வாத்தியார் என் முகத்தைப் பார்க்கிறார்.


"வளையாபதி... குண்டலகேசி...சீவகசிந்தாமணி...!"


"ம்...இரு!"
சரியான விடைசொல்லிவிட்ட சந்தோசத்தோடு உட்கார்கிறேன்.


ஏற்கனவே வாத்தியார் சொல்லித்தந்ததை மனப்பாடமாக்கி ஒப்புவித்தாயிற்று.


ஆனால் இந்த ஐம்பெருங்காப்பியங்களில் எதையும் அப்போது படித்திருக்கவில்லை.


என்றாலும் சிலப்பதிகாரம்மட்டும் எனக்கு ஏற்கனவே தெரிந்த - மிகவும் அறிமுகமான - கதைபோல உணர்ந்திருந்தேன்.


சிலப்பதிகாரம் எங்கள் ஊருக்குள்ளே நிகழ்ந்த கதைபோலவும் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த கண்ணகியம்மன் கோவில்தான் கண்ணகி முன்பு குடியிருந்த வீடுபோலவும் இப்போதும் அவள் இங்கேதான் குடியிருக்கிறாள் என்பதுபோலவும் எனக்குள் ஒரு நிழற்படம் நிலையாகியிருந்தது.







பலவருடங்களுக்கு முன்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) ஒருநாள் எங்கள் ஊரின் கிழக்குக் கடற்கரையோரத்திலிருக்கும் ஒரு கலங்கரைவிளக்கின் அருகே பெரியதொரு மரப்பேழைகிடப்பதைச் சிலர் கண்டனராம்.


அதனை ஊருக்குள் சுமந்து வந்தவர்கள் சற்று இளைப்பாறுவதற்காக தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திலுள்ள ஒரு பூவரச மரத்தினடியில் அதை இறக்கிவைத்தனராம்.


மறுபடி தூக்க முயன்றபோது அந்தப் பேழை அசைய மறுத்துவிட்டதாம். அப்போது அங்கு நின்ற பெண்களிலொருத்தி உருக்கொண்டு இந்தப் பேழைக்குள் இருப்பது கண்ணகியாகிய தான்தான் என்றும் தனக்கொரு கோயிலை இந்த இடத்திலேயே அமைக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாள் அவளது சொற்படியே அந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.


மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட கண்ணகி தன் கோபம் தீர்ந்ததும் இங்கு வந்துவிட்டதாக ஊரவர் நம்பினர்.


"அப்பு" இந்தக் கதையை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தபோது அதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.


நடந்திருக்குமோ நடந்திருக்காதோ என்று ஆராய்ச்சிசெய்கிற வயதல்ல எனக்கு.


"கண்ணகி எண்டால் ஆர்?"


"அது மதுரையிலை வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்!"


"மதுரை எண்டால்...?"


"அது தென்னிந்தியாவிலை இருக்கிற ஒரு ஊர்!"


"அது சரியான தூரம் எல்லே..?"


அப்பு சிரித்தார்.


"ஆனா எங்களுக்குக் கிட்ட...! இந்தக் கடலைத் தாண்டி அந்தப் பக்கம்போனால் இந்தியாதான்!"


"எவ்வளவு தூரம்...?"


"என்ன ஒரு பதினேழு பதினெட்டுக் கட்டை வரும்!"


(கட்டை என்றால் ஒரு மைல்)


இவ்வளவு கிட்டத்தில் இருந்தால் கண்ணகி வரலாம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.




கண்ணகியின் கதைதான் சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் எழுதினது என்று தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் படிக்கவில்லை.


எனது மிகச் சிறிய வயதில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் தொடர்ந்து மூன்றுநாட்கள் சிலப்பதிகாரவிழா நடைபெற்றிருக்கிறது.




ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜகந்நாதன் போன்ற இந்திய தமிழறிஞர்களும், ஈழத்து அறிஞர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்று அறிந்திருந்தேன்.


(இந்தவிழாவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்தால் விபரம் தாருங்கள்)







இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை எங்கள் தலைமுறை நன்கு தெரிந்துகொள்வதற்கு அதிகமாய்ப் பாடுபட்டவர் "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி.யே என்று அறிந்ததால் அவர்மீது எனக்குள் ஒருவித பாசம் துளிர்த்தது.




ம.பொ.சி.யாக இளங்கோ அடிகள் நடமாடிக்கொண்டிருப்பதுபோல ஒரு கற்பனையை எனக்குள் வளர்த்துக்கொண்டிருந்தேன்.




ம.பொ.சி. இல்லையேல் சிலப்பதிகாரமோ கட்டபொம்மனோ கப்பலோட்டிய தமிழனோ இந்த அளவுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பலரும் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.




கட்டபொம்மன்பற்றி ம.பொ.சியின் கூற்றுக்கு எதிராக எனது அபிமான எழுத்தாளர் தமிழ்வாணன் கல்கண்டில் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்று தொடர்கட்டுரை எழுதியபோது தமிழ்வாணனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று எனக்குக் கோபம் கோபமாக வந்தது.






-சின்னாச்சியின்ரமோன்

Sonntag, 13. Mai 2007

கற்பனைகளும் புராணங்களும்










உலகத்தில் பிறந்த எல்லோருமே கதாசிரியர்கள்தான்.
சிலர் எழுதுகிறார்கள் - பலர் எழுதுவதில்லை.
சிலர் சொல்கிறார்கள் - பலர் சொல்வதில்லை.
அவ்வளவுதான் வித்தியாசம்.
மற்றும்படி எல்லோருமே கதாசிரியா்கள்தான்.
ஆனால் எழுதுபவர்மட்டுமே எழுத்தாளர் என்று பேர் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

உள்ளமும் உணர்வும் அதன்வழிவருகின்ற அனுபவங்களும் கதைகளாக மாறிவிடுகின்றன.
"நேற்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை!" என்பதில் ஒரு கதை..
"இன்றைக்குத்தான் அவன் என்னுடன் பேசினான்!" என்பதில் ஒரு கதை..
"இனி அவளை நான் சந்திக்கமாட்டேன்" என்பதில் ஒரு கதை..
"அந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது!" என்பதில் ஒரு கதை...
இப்படி ஒவ்வொருவரும் கதைக்கின்ற வாக்கியங்களுக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டிருக்கிற உணா்வு அல்லது அனுபவம்- தன்னுள் ஏதேனும் ஒரு கதையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.
தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை ஒருவர் சொல்லும்போது அதைச் சிலரால் அங்கீகரிக்க முடிவதில்லை.
"சுத்தப் புளுகு!" என்றோ "இவன் கற்பனைசெய்து கதைக்கிறான்!" என்றோ அந்தக் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
மற்றவர் சொல்வதை மறுதலிப்பதனால் தம்மைப் புத்திசாலிகளாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்கின்ற விருப்பத்தின் வெளிப்பாடு அத்தகைய கதைகளை ஒதுக்கிவிடத் தூண்டுகிறது.

சிறுவர்களான எங்கள் உலகம் மகிழ்ச்சிகரமானது.
எதற்காகவேனும் அடம்பிடித்து அழுதாலும் அடுத்தகணமே அந்தத் துன்பத்தின் சாயல் துளியுமின்றி சிரித்து மகிழ்ந்து துள்ளாட்டம் போடுவது. வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே குழந்தைத் தனமான சந்தோசங்களில் மனதைப் பறிகொடுத்திருப்பது.
அந்தப் பொழுதுகளில்-
"அப்பு"வைப்போல் எனக்குத் தொடர்ச்சியாகக் கதைசொல்ல எவராவது வரவேண்டியிருந்தது.
புத்தகங்களின் வடிவில் வந்த எழுத்தாளர்கள் புதியதொரு உலகத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.
நாம் வாழும் இந்த உலகத்தினுள் இன்னொரு உலகத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருந்தது. இது நடக்காது என்று தெரிந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும் கதைகள் அவை.
அந்தப் பருவத்துக்குரிய இத்தகைய கதைகளைத் தந்தவர்கள் பலர் இருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் என் மனதுக்குள் இடம்பிடித்துக்கொண்டிருந்தவர்-
வாண்டுமாமா.
அவரது கதைகள் பல தொடர்கதைகளாகவும், சித்திரக்கதைகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அந்தக் கதைகளுக்குள் உலவிய கதாபாத்திரங்கள் பலர், இரவும்பகலும் என்னுள்ளும் உலவிக்கொண்டிருந்தார்கள். மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் என்று புதிய புதிய கனவுலகங்களை அவர் தன் எழுத்தில் எடுத்துவந்தார்.அந்த வண்ணக் கனவுகளில் மனதைப் பறிகொடுத்த காலங்கள் இன்னும் பசுமையாக...

வளரவளர வாழ்க்கையில் இன்னும் அதிசயமான நிகழ்வுகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற பிரமையை அவை தந்தன. அவற்றை வாசிப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி இருந்தது.
வாண்டுமாமாவின் கதைகளைப் போலவே அந்தப் பருவத்தில் நான் வாசித்த புராணக்கதைகளும் ஒருவகை மாயாஜாலக்கதைகள் போலவே அப்போது எனக்குத் தோன்றின.
"ஒரு தேவாரம் படி..!"
"தேவாரமா?"
"என்னடா தேவாரம் தெரியாதா?"
"...........!"
"தோடுடைய செவியன்...!"
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தே ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவன் அன்றே!"
-பாடினேன்.
ஞானப் பால் உண்ட ஞானசம்பந்தன் பாடிய தேவாரம்.
தீர்த்தக் குளத்தருகே நின்று மூன்றே வயதான ஞானசம்பந்தன் பாடிக் கொண்டிருந்தான்.

தீர்த்தக்குளம் என்றதும் எனக்கு முதலில் நினைவில் வருவது கண்ணகி அம்மன் கோவில் தீா்த்தக் குளம்தான்.
அப்போது கண்ணை மூடிக்கொண்டு அந்தத் தேவாரத்தை நான் ஒப்புவித்தபோது -என் கண்களுக்குள் எங்கள் ஊர்த் தீர்த்தக்குளத்தருகே நின்று ஞானசம்பந்தன் பாடிக்கொண்டிருப்பதாகத்தான் காட்சி விரிந்தது.
கண்ணகியாள் ஆலயத்தின் தெற்கு வீதியில் -அலையெறியும் கடலின் கரையில் அமைந்திருக்கும் அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் நின்று பார்த்தால் மேற்குத் திசையில் செக்கச் சிவந்த சூரியன் கடலுள் விழும் காட்சி விரியும்.
சற்றுத் தொலைவில் கடலின் கரையருகே சுடுகாடு.
அதற்கும் சற்றுத் தூரத்தில் வைத்தியசாலை.

"செக்கச் சிவந்த சிவன் சுடலைப்பொடி பூசி என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான்..!"
-என் கற்பனையில் அப்போது விரிந்த காட்சிதான் அது.
என்றாலும் அது வெறும் கற்பனைதானா?

வாண்டுமாமாவின் கற்பனைக் கதைகளை வாசித்துக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில்தான் புராணக் கதைகளையும் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
- சின்னாச்சியின்ரமோன்.



Dienstag, 1. Mai 2007

ஞானப் பழத்தைப் பிழிந்து...




















எங்கள் வீட்டுக்குப் புதிதாக ஒரு வானொலிப்பெட்டி வந்திருந்தது.
பெரியண்ணா கொழும்பிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கொண்டு வந்திருந்தார்.
ஏற்கனவே வீட்டில் பாடிக்கொண்டிருந்த "கிராமபோன்" பெட்டியில் சாதாரணத் தோசை அளவிலான இசைத்தட்டுக்களைப் போட்டு "தீன கருணாகரனே நடராஜா!" என்று தியாகராஜபாகவதரும்
"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்று சி.எஸ்.ஜெயராமனும்
"ஞானப் பழத்தைப் பிழிந்து..!" என்று கே.பி.சுந்தராம்பாளும்
"மலரின் மதுவெல்லாம் இன்னிசைதானோ..?" என்று ஏ.எம். ராஜாவும் அடிக்கடி பாடிக்கொண்டிருந்ததை நிறுத்தி
"இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு!" என்றும்
"இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு!" என்றும் கேட்கத் தொடங்கியாயிற்று.
ஐந்தாம் வகுப்போடு இராஜராஜேஸ்வரி வித்தியாசாலையிலிருந்து பிரிந்து வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த மகாவித்தியாலயத்தில் போய்ச் சேர்ந்திருந்தேன்.
வீட்டுக்கும் பாடசாலைக்கும் பதினைந்து நிமிட நடைத்தூரம்.
இராஜேஸ்வரியில் மத்தியானத்துடன் பள்ளிக்கூடம் முடிந்து விடும்.
மகாவித்தியாலயத்தில் இரண்டு வேளை வகுப்பு.
மத்தியானம் சாப்பாட்டு வேளைக்கு முக்கால் மணித்தியாலம்.
அந்த இடைவேளைக்குள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து "ஆச்சி"(அப்பாவை "அப்பு" என்று அழைப்பதுபோல் அப்போதெல்லாம் அம்மாவை ஆச்சி என்றுதான் அழைப்பது) ஆக்கிவைத்திருக்கும் சோற்றை அவசர அவசரமாக உருட்டி வாயில் போட்டுவிட்டு திரும்பவும் பாடசாலைக்கு ஓட்டமும் நடையுமாகப் போய்ச்சேர்வது.
பின்னேரம் பாடசாலை விட்ட பிறகு ஆறுதலாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு வருவது..
இப்போது வானொலிப்பெட்டி வந்தபிறகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிடுவேன்.
காலையில் ஓரிரண்டு மணித்தியாலங்களும் பின்னேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலமும்தான் வானொலியில் பாட்டுக்கள் ஒலிபரப்பாகும்.
தேசிய ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு என்று இரண்டு சேவைகள்.
வர்த்தக ஒலிபரப்பே அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
தேசிய ஒலிபரப்பு பின்னேரங்களில் 5 அல்லது 6மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 அல்லது 11மணிவரை ஒலிபரப்பானதாக ஞாபகம்.
தேசிய ஒலிபரப்பு பலவிதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தாலும் வர்த்தக ஒலிபரப்பு திரைப்படப் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு இயங்கியதால் அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
வர்த்தக ஒலிபரப்பின் பிரபலத்துக்கு அப்போது முக்கிய காரணமாக விளங்கியவர் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன்.
ஒருமுறை தமிழ்நாட்டில் ஒரு விழா நடந்ததாம்.அந்த விழாமேடையில் விழா அறிவிப்பாளர் இரசிகர்களைப் பார்த்து இப்போது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் உரையாற்றுவார் என்று அறிமுகப்படுத்திவிட்டு ஒருவரை அழைத்தாராம்.
மேடையில் வந்து நின்றவரை எவருக்கும் தெரியவில்லை.
யாரிவர் என்று எல்லோரும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவர் தனது கம்பீரமான குரலில்"வணக்கம் நேயர்களே! இது இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு இப்போது நேரம் மாலை 6.00மணி.." என்று ஆரம்பிக்க இரசிகர்களின் கரகோசம் வானைப் பிளந்ததாம்.
இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததற்கு இது ஒரு உதாரணம்.
திரைப்படப் பாடல்கள் பலரால் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானபோதும் அது சமூகத்திலும் தனிமனிதரிடத்திலும் ஏற்படுத்திவரும் தாக்கம் அதிகம்தான்.
எனக்குப் பிடித்த பாட்டு என்று ஏதாவதொன்றை உங்களால் நினைத்துப் பார்க்க முடிந்தால் அந்தப் பாடலின் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.
கதைக்குள் பாட்டு அல்லது பாட்டுக்குள் கதை என்று கற்பனை செய்தால் ஒரு இசையும் கதையும் உருவாகிவிடும்.

பெரும்பாலும் கனவுகளிலே மூழ்கிப்போய்விடுகிற எனது சின்னவயசில்நான் அதிகம் வெட்கப்படுகிறவனாகவும் ( "எப்பவும் தாயின்ரை சீலைக்குள்ளைதான் தலை" என்று எனது அம்மாச்சி என்னைப் பேசுவா) இருளுக்கு அஞ்சுகிறவனாகவும், உறவுக்காரர்களைத் தவிர ஏனைய மனிதர்களுடன் பழகுவதற்குப் பிடிக்காதவனாகவும், எப்போதும் தனிமையைத் தேடுகிறவனாகவும் இருந்திருக்கிறேன். (கண்ட கண்ட பெடியங்களோடை சேர்ந்து திரியப்படாது என்று  அப்பா என்னை எச்சரித்து வைத்திருந்ததும் ஒரு காரணம்)
பாடசாலை முடிந்துவந்ததும் பெடியங்கள் கண்ணகி அம்மன் கோவில் மேற்கு வீதியில் கிட்டி, தாச்சி என்று விளையாடிக்கொண்டிருக்கும் மாலை நேரங்களில் நான் வீட்டுக்குள் ஏதாவது புத்தகங்களோடு உறவாடிக் கொண்டிருப்பேன். அப்பாவின் கண்டிப்பு என்னை ஒரு புத்தகப் பூச்சியாக மாற்றுவதற்கு உதவியிருந்தது.
வெறும் கற்பனைக் கதைகளில் மனதைப் பறிகொடுத்திருந்த எனக்கு வாழ்வின் வேறொரு பக்கம் இருப்பதாகக் கற்பித்தவர் தமிழ்வாணன்.
"துணிவே துணை!" என்று பெரிய எழுத்திலும், கல்கண்டு என்பதை சிறிய எழுத்திலுமாகப் போட்டு கல்கண்டை வெளியிட்டு தமிழ்ச் சிறுவர்களின் மனங்களைப் பற்றிக்கொண்ட தமிழ்வாணன், "கல்கண்டு" என்ற இனிப்பான பெயரைச் சூட்டி எதையும் "கண்டு -கல்!" ("காண்பவைகளால் அறிவு பெறு!") என்று உணர்த்தி என்போன்ற சிறுவர்களுக்கு "எழுத்தாள வாத்தியாராக" தன்னை இனம்காட்டினார்.
மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஆச்சியிடம் சொல்லிவிட்டு பாண்வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று சில்லறை வாங்கிக்கொண்டு அந்தக் காசில் மகாவித்தியாலயத்துக்கு முன்னிருக்கும் புத்தகக் கடையில் கல்கண்டு வாங்கி வாசித்த நாட்களும் என் பாடசாலைப் பருவத்தில் அதிகம்தான்.
அதிகமான புத்தகங்கள் தினசரிகள் என்று கொழும்பிலிருந்து வந்தாலும் சிறுவர்களுக்கான கல்கண்டு, கண்ணன் போன்ற புத்தகங்களை ஊருக்குள்ளிருந்த புத்தகக் கடையில் நான் வாங்கினேன்.
என்னுள்ளிருந்த சின்னப்பெடியன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவனுக்கு மீசை அரும்பிய பொழுதில் அவனிடமிருந்த வெட்கத்தையும், பயத்தையும் பிடுங்கி எறிவதற்கென்று எழுத்தாணி கொண்டு வந்தார் இன்னொரு எழுத்தாளர்.
தமிழ்வாணன்போல் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை நூலாக்கித்தந்த அந்த எழுத்தாளர்-
தமிழ்நாட்டு எழுத்தாளரான - அப்துற் றகீம்
தங்கள் எழுத்துக்களால் எனக்கு வாழ்க்கைப் பாடம் போதித்தவர்கள் என்று சொல்வதானால் இவர்கள் இருவரையும்தான் முதலில் நினைத்துக் கொள்வேன் எப்போதும்!
-சின்னாச்சியின்ரமோன்










Montag, 23. April 2007

வசந்தத்தில் ஓர் நாள்!























என் வாழ்க்கைப் பயணத்தின் இரண்டாவது பத்தாண்டு 1960களில் தொடங்கிற்று
1960களிலிருந்து 1970வரையிலான காலகட்டம் - பாலர்பருவத்துக்கும் வாலிபப்பருவத்துக்கும் இடையிலான பருவம்தொடங்கி- இருபதுவயது வாலிபனாக நான் மாறிக்கொண்டிருந்த இளமைக்காலங்கள்.
அந்தக் காலகட்டத்தில் என்னைப்போல் சிறுவர்களாக இளைஞர்களாக இருந்தவர்கள் தமிழ்க் கலை இலக்கிய
உலகத்தின் ஒருபொற்காலத்தில் வாழ்ந்ததாகப் புளகாங்கிதம் கொள்ளலாம்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் வித்தகர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்
முன்னணியில் நின்று முகம்காட்டிய பொழுதுகள் அவை. தமிழ்க் கலை இலக்கிய உலகம் எண்ணற்ற கலை இலக்கியவாதிகளை அறிமுகம்கொண்ட காலம் அது என்று தயங்காமல் சொல்வதற்கு சாட்சியங்களாக ஏராளமான கலை இலக்கியப்படைப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் அந்தக் காலகட்டத்தை வியந்துரைக்கிற பலரை நாம் காணலாம்.
பழமை என்றும் இனிமை என்று இன்று பலரால் பகிரப்படுகின்ற எத்தனையோ கலைவடிவங்கள்
புத்தம்புதியனவாய் மணம்பரப்பியது அந்தக் காலகட்டத்தில்தான்.!
அந்தப் பத்தாண்டுகளின் ஆரம்ப வருடங்கள்....
உலகம் புரிகிற சிறுவனாய் உருமாறிக்கொண்டிருந்தேன் நான்
மழைக் காலம் தொடங்கியிருந்தது!
பள்ளக் காணிகளில் வெள்ளம் தேங்கி நிற்க, ஒழுங்கைகளுக்குள்ளும் மேட்டிலிருந்து பள்ளம்நோக்கி
வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது..
வீட்டிலிருந்து புறப்பட்டால் பள்ளிக்கூடம் போவதற்குள் கால்கள் விறைத்துப் போய்விடும்.
அன்றைக்கும் சரியான அடைமழை..
மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, சற்று ஓய்ந்திருந்த மழை, இடைவழியில் சடாரெனப் பொழிந்து என்னை நன்றாகவே குளிப்பாட்டிவிட்டிருந்தது.
பெண்கள் அணியும் அரைப்பாவாடையைப்போல் முழங்கால்வரை தொளதொளக்கும் அரைக் காற்சட்டையும் முழங்கைகளைத் தொடும் அரைக்கைச் சட்டையும் மழைநீரில் ஊறிக் கனத்தன.
மழையில் நனைந்துவிடாதிருக்க புத்தகங்களை சட்டைக்குள் நுழைத்து நெஞ்சோடு
அணைத்துப் பிடித்தும் ஈரம் கசகசத்தது.
எட்டி நடக்க முடியாமல் ஈரக் காற்சட்டை இடைஞ்சல் கொடுத்தது.என்றாலும் நடையில் வேகம் காட்டினேன்.
காலையில் பள்ளிக்கூடத்தில் சாப்பிட்ட ஒரு பணிஸ், குடித்த ஒருபேணி பால் இரண்டும் விரைவாகவே
செமிபாடடைந்திருந்தன.
வயிறு மெல்லிதாய்க் கிள்ளத் தொடங்கியிருந்தது.
வீட்டுப் படலையை நெருங்கியபோது பின்னால் விசில் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
மழைக்கோட்டுப் போட்டிருந்த தபால்காரர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
மழைக்குள் நனையாதவாறு தபால் பைக்குள் மறைத்துவைத்திருந்த காகிதக் கட்டொன்றை எடுத்து
"இந்தா!" என்று என்னிடம் தந்தார்.
கையில் வாங்கும்போதே புரிந்துவிட்டது. அது கொழும்பிலிருந்து பெரியண்ணா அனுப்பிய கல்கி வார இதழ்கள்.
என் அக்கா கல்கியின் தீவிர வாசகி.
கல்கியின் எழுத்துக்களென்றால் உயிர் என்கிற மாதிரியானதொரு இரசனை.
அப்பாவுக்குப் பிறகு எனக்கு கதைசொல்வது அக்காதான்.
ஆனால் அக்காவின் கதைகள் புதிய எழுத்தாளர்கள் எழுதுகிற புதிய கதைகளாக இருக்கும். பெரும்பாலும்
கதைச் சுருக்கங்களே.
தொடக்கத்தில் அக்காவுக்காகவே கொழும்பிலிருந்து கல்கி குமுதம் ஆனந்த விகடன் என்று அண்ணா
அனுப்பிக் கொண்டிருந்தார்.
அக்காவின் புத்தகப் பைத்தியம் என்னையும் தங்கச்சியையும் தொற்றிக்கொண்டது.
சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுக்கள் என்று எல்லாப் புத்தகங்களிலும் தேடித் தேடி வாசிக்கப் பழகிக்கொண்டோம்.
கல்கியில் வெளியான தங்கமாம்பழம் மாயப்பந்து போன்ற கதைகள் எங்களைக் கவர்ந்துகொள்ள
அவ்வப்போது கையில் கிடைக்கும் புத்தகங்களை யெல்லாம் புரட்டிப் புரட்டி சிறுவர் பகுதிகளைத் தேட ஆரம்பித்தோம்.
சித்திரக்கதைகள் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கின.
இப்படியொரு காலகட்டத்தில் தான் இந்தக் கல்கி இதழ்களும் வந்தன..
தபால்காரர் தந்த புத்தகங்களோடு வீட்டுக்கு ஓடி அவசர அவசரமாக ஈரக் "களிசானையும்" "சேட்"டையும் களைந்து இன்னொரு தொளதொள களிசானை உடுத்திக்கொண்டு கல்கியைப் பிரித்து அதில் மூழ்கிப்போனேன்.
வெளியே மழையின் சலசலப்பு..
குசினிக்குள் சமைத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் சமையலின் வாசம்... சற்று முன்பு வயிற்றைக் கிள்ளிய பசி... எல்லாம் மறந்துபோக-
கல்கியோடு நான்...!
அப்பா என் அருகில் இருந்து அவர் எழுதாத கதைகளைச் சொல்லித் தந்ததுபோல -
கதைகளை எழுதியவர்கள் அருகில் இல்லாமல் அவர்கள் சொல்லும் கதைகளுக்குள் நான் இலயித்துப் போயிருந்தேன்..
யார் எழுதினார் என்ன எழுதினார் என்றில்லாமல் எழுத்துக்களில் மட்டுமே மூழ்கிப்போன காலங்கள் அவை.
"கல்கி ஆசிரியர்தான் "கல்கி" என்ற பெயரில் கதை எழுதிறவர்!" என்று அக்கா சொல்லுவா.
"நல்லா எழுதுவார்.. அவரின்ரை கதையளை எடுத்துப் படிக்க வெளிக்கிட்டால் முடிக்காமல் வைக்க மனம்வராது!" என்பா.
"கல்கி எண்டால் என்னக்கா அர்த்தம்?"
"கல்யாணசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி எண்ட இரண்டு பேரின்ரை சுருக்கம்தான் கல் கி!" என்றா அக்கா.

 Bild könnte enthalten: 1 Person, Meme und Text




"மகாபாரதத்திலை கல்கி அவதாரம் எண்டு ஒண்டு வருகுதெல்லே..நான் அதாக்கும் எண்டு நினைச்சன்!"
"ம்.. அப்பிடியும் சொல்லலாம்... தசாவதாரத்திலை கடைசி அவதாரம் கல்கி அவதாரம்தான்!"
"அதுக்குப்பிறகு உலகம் இருக்காதாம்!"
"ஆர் சொன்னது அப்பிடி... உலகத்திலை பிரளயங்கள் வரும் ஆனா உலகம் அழியாது! கெட்டவையள்
அழிஞ்சு நல்லவையள்மட்டும் இந்த உலகத்திலை இருப்பினம்!"
"அப்ப இப்போதைக்கு பிரளயம் வராது அக்கா.. ஏனெண்டால் இப்ப எல்லாரும் நல்லவைதானே
இருக்கினம்..?"என்றேன்.
அக்கா சிரித்தா.
"கல்கி அவதாரம் வருகுதோ இல்லையோ கல்கி புத்தகம் தொடர்ந்து வரும்!" என்றேன் நான்.

-சின்னாச்சியின்ரமோன்

G

Donnerstag, 19. April 2007

பிள்ளையார் சுழி.

தெற்குப் பார்த்த வீடு.
வீட்டின் தெற்குப்புற வேலிக்கு அப்பால் சில யார் தொலைவில்..
கண்ணகியம்மன் கோயிலின் வடக்கு வீதி.
கோயிலுக்குத் தெற்குவீதிப்பக்கமாய் அலை எறிந்து விளையாடும் கடல்.
வீட்டுக்கு மேற்குப் புறக் காணிக்குள் காய்கறித்தோட்டம்.
சோலையென வீட்டைச் சுற்றியிருந்த தென்னைமரங்களுக்குக் குழந்தைகள்போல் சின்னச் சின்னத் தென்னங் கன்றுகள் காய்கறித் தோட்டத்திடையே கீற்றுத் தலையசைத்துச் சிரிக்கின்றன.
சில காலத்துக்கு முன்புதான் அவைகளை அங்கே நாட்டி வைத்திருந்தார் சின்னையர்.

58 இனக் கலவரத்தோடு, குருநாகலயில் நடத்திக்கொண்டிருந்த வியாபாரத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, கொழும்பிலும் இரத்தினபுரியிலுமாய் பணிபுரிந்து கொண்டிருந்த 3மகன்களையும் அழைத்துக்கொண்டு கப்பலில் ஊர் வந்தவர்தான்.
அதற்குப் பிறகு குருநாகலக்குத் திரும்ப அவரது ரோஷம் இடம்கொடுக்காததால் சொந்த ஊரிலேயே நிரந்தரமானார்.
பிள்ளைகள்மட்டும் மறுபடி ரயிலேறி கொழும்புக்குப் போய்விட்டார்கள்.

58இல் அவருக்கு 56 வயது நிறைந்திருந்தது.
மூத்த மகளும் திருமணம் செய்துகொண்டு கணவருடன் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தாள்.ஆண்4, பெண்2 என்று பெற்றவர் அவர்.
இப்போது கடைக்குட்டிப் பையனும் அவனுக்கு இளைய ஒருபெண்ணும்-முறையே 9வயதிலும் 7வயதிலும்.

மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் அவர் வாழ்வு அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது.

அது ஒருமாலைப்பொழுது.
முற்றத்தில் ஒரு சாக்குக் கட்டிலைப்போட்டு அதன் மீது பாய்விரித்து அதில் படுத்துக் கிடந்தபடி பக்கத்தில் நின்றிருக்கும் தென்னைமரங்களின் ஓலைகள் காற்றில் அசையும் அழகையும் அதனூடே தலைகாட்டும் நிலாவையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார் அவர்.
திடீரென ஓடிவந்து அவருக்கு அருகில் படுத்துக்கொண்ட அவரது சின்ன மகன் அவரது வெற்று மார்பை தன் மெலிந்த கரங்களால் இறுகக் கட்டிக்கொண்டு அவரது முகம்பார்த்துக் கேட்டான்:
"ஒரு கதை சொல்லுங்க அப்பு!"
(அப்போதெல்லாம் அப்பாவை அப்பு என்றே அழைக்கப் பழக்கப்பட்டிருந்தான் அவன்)
"கதையோ..?"
"ம்..கதைதான்!"
" என்னகதை..?"
"என்னெண்டாலும்.. ஏதேனும் ஒரு கதை!.. உங்களுக்குத்தான் நிறையக் கதையள் தெரியுமே!"
"சரி..சொல்கிறன் கேள்..!.. ஒரு காட்டிலை ஒரு சிங்கம்!"
" என்ன சிங்கமும் முயலும் கதையா..?"
" இல்லை சிங்கமும் எலியும்!"
"அந்த எலி வலையறுத்த கதைதானை!"
"ம்..!"
"இதெல்லாம் முந்திச் சொல்லீற்றீங்கள்..வேறை கதை ஏதேனும் பெரிய கதை சொல்லுங்கோ!"
"பெரிய கதை எண்டால்.. உனக்குப் பாரதக் கதைதான் சொல்லவேணும்!"
"சரி சரி சொல்லுங்கோ!"
"ஆனால் இந்தக் கதையை ஒருநாளையிலை சொல்ல முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சொல்லுவன்.!"
"ம்..!"
"ஒரு காலத்திலை ... வேதவியாசர் எண்டொரு முனிவா்...!"

கதை ஆரம்பமாயிற்று. மகாபாரதக் கதை.
கதையில் வரும் பாத்திரங்களும் நாடுநகரங்களும் சம்பவக் கோர்வைகளும் ஒரு புத்தகம் படிப்பதுபோல்...
"இவளவத்தையும் என்னமாதிரிப் பாடமாக்கி வைச்சிருக்கிறார்!" என்ற ஆச்சரியம் சின்னமகனுக்கு.
அவ்வப்போது கதை தொடர்ந்தது.
கதைக்குள் கதையாய்... கிளைக் கதைகள்..

"அப்பு"விடம் அடிக்கடி கேட்ட கதைகள் இவனுள்ளும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிவிட்டிருந்தன.
கதைகேட்பது படிப்பது போன்று கதை எழுதுவதும் ஒரு இனிமையான அனுபவம் என்று உணர்ந்தான் இவன்.


ம்...
என் எழுத்துப் பயணத்தில் பிள்ளையார் சுழி போட்டாயிற்று.
நிலாக்காலங்களில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு என்தந்தையிடம் நான் கதைகேட்ட அந்தக்காலங்கள்..
எழுதுபவர்கள்மட்டும்தான் எழுத்தாளர்களா..?
எழுத்துவடிவம் பெறாத எத்தனையோ கதைகளை கர்ணபரம்பரைக் கதைகளாக செவிவழி உலாவவிட்டவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா?

எழுதாத ஒரு எழுத்தாளனாய் என்னுள்ளிருந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன்-
என்தந்தை!

கதைகேட்கும் பருவத்திலிருந்து கதைவாசிக்கும் பருவம் வந்தது. பெட்டகத்துக்குள்ளிருந்து பெரிய எழுத்து மகாபாரதக்கதையை (அப்பாடி எவ்வளவு பாரம்?) எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கியாயிற்று.

மகாபாரதம் நடந்தபோது நானும் அங்கே இருந்தேன் என்று இப்போதும்என்னை நினைக்க வைக்கிறமாதிரி அந்த உலகத்திலேயே வாழ வைக்கிற எழுத்துக்கள்.


வாசகனாக மாறியது சரி..
எப்போது நான் எழுதத் தொடங்கினேன்...?
மீசைகூட அரும்பாத பருவத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்தில் கதை என்று ஏதோ எழுதி என்பள்ளித் தோழன் சிவநாதனிடம் கொடுக்க--
எனக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த- சின்னத்துரை வாத்தியார் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் சிவநாதன் அதை வாசித்துக்கொண்டிருக்க -
மூக்குக் கண்ணாடியை உயர்த்தி அவனைப் பார்த்து கையிலிருந்த பிரம்பால் மேசையில் ஒரு தட்டுத்தட்டி -
"என்ன அது.. கொண்டு வா இங்கை!" என்று அதட்ட-
சிவநாதன் ஒரு பயமுமில்லாமல் அதை அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்து -
"மகேசன் எழுதின கதை!" என்றான்.
"கதையோ..?" என்றவர் சூட்டோடு சூடாக அதைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தார்.

எனக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.
(சின்னத்துரை வாத்தியாரிடம் ஒருநாளும் நான் அடிவாங்கினதில்லை. ஆனால் மற்றவர்கள் வாங்கும்போது அந்த அடியின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கும் சாத்தல்தான் என்பதுபோல் சிவநாதனைக் கிள்ளினேன். "ஏண்டா குடுத்தனி?"என்றேன். அவன் சிரித்தான். )

நான் எழுதினது என்னமோ ராசா ராணிக் கதைதான் என்றாலும் அதில் காதல் வேறு.

கதைச்சுருக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது.

இரண்டு நாடுகளுக்குப் பகை.
ஒரு ராசாவின் மகள் மற்ற ராசாவின் மகனைக் காதலிக்கிறாள்.
இருவரும் கந்தர்வமணம் புரிந்துகொள்கிறார்கள்.
இரண்டு ராசாக்களும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தங்கள் பகையை மறந்து ஒன்று சேர்கிறார்கள்.

மீசைமுளைக்காத பொடியன் காதல் கத்தரிக்காய் என்று கதை எழுதி அதை அ.. ஆவன்னா சொல்லிக்குடுத்த வாத்தியாரிடமே காட்டுவதென்றால்...
வாத்தியார் என்ன சொல்வாரோ...

ஒருவித பரபரப்புடன் இருந்தேன்.
"இங்கை வாடா..!"சிவநாதனை அழைத்தார் வாத்தியார்.
"இந்தா... இதை அவனிட்டைக்குடு!"
நான் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவரது முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.
"ம்.. நல்லாத்தான் எழுதிறை!"

அ..ஆ.. சொல்லித்தந்த அந்த வாத்தியார் எனக்களித்த ஆசீர்வாதம் அது.
நான் வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தேன்.
மாதா பிதா குரு தெய்வம்!

-சின்னாச்சியின்ரமோன்.

Sonntag, 15. April 2007

முதுமை தனிமை இனிமை

என் இதயத்தில் தங்கள் பெயர்பதித்துப் போனவர்களும்
பெயர் பதித்துக கொண்டிருப்பவர்களுமாக..
முன்பின் எனக்கு நேரில் அறிமுகமில்லாத மனிதர்களும்,
எப்போதோ எங்கோ நேரடியாக சந்தித்துப் போனபோது முக அறிமுகம் கொண்டவர்களுமாய்..
அடிக்கடி என் நினைவில் வந்துபோகின்றவர்களை எண்ணிப் பார்க்கும் பெரும்பாலான பொழுதுகளில் எல்லாம் ஒருவிதத் தனிமை!

தனியாக இருக்கிறேன் ஆனால் தனியாக இல்லை என்பதுபோல் என்னுள் அவர்கள் தங்களோடு என்னை இணைத்துக் கொள்கிறார்கள்.
என் நினைவில் அவர்கள் உலாவரும்போது அந்தக் காலங்களும் நிகழ்காலங்களாய்
மனத்துள் படம்காட்டத் தொடங்கிவிடுகின்றன.

முதுமையும் அதனோடிணையும் தனிமையும்..

எண்ணற்ற மனிதர்களைக் கண்டுவிட்ட இந்த உலகம் முதுமைவரை எல்லோரையும் விட்டு வைப்பதில்லை.
மொட்டுக்களாய் மலர்களாய் பிஞ்சுகளாய் காய் கனிகளாய் இடையிலே பறிக்கப்பட்டவர்களே ஏராளம்.
இதில் முதுமை கண்டவர்களும் அந்த முதுமையிலே தனிமை கண்டவர்களும்
அந்தத் தனிமையிலே இனிமை கண்டவர்களும் உலகில் வந்துபோன மனிதர்களின் எண்ணிக்கையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச்சொற்பமே.

"...கடந்தகாலமோ திரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
இதுதானே அறுபதின்நிலை!..."


என் இருபதுகளில் நான் கேட்ட பாட்டு
இப்போதும்... அறுபதை நெருங்கும்போதும்...

ஆனால் மெய்தானா அது?

கடந்தகாலமோ எதிர்காலமோ என்றில்லாமல் எப்போதும் நிகழ்காலமாகவே காண்கிறேன் நான்

பள்ளிச் சிறுவனாய் பால பாடம் பாலபோதினி என்று பாடப்புத்தகங்களுடன் ஆரம்பித்த காலங்கள் என் நினைவுகளில் இப்போது நிகழ்காலமாய்...

அம்மாவின் மடியிலிருந்து கீழிறங்கி நான் மண்ணழைந்த நிலமாய்
சூழ்கடலின் நடுவே படுத்திடுக்கும் ஒரு சுந்தரத் தீவாய்...
என் புங்குடுதீவு.

அ..ஆ..இ...என்று நான் உச்சரித்து அரிச்சுவடி தொடங்கிய
இராஜராஜேஸ்வரி வித்தியாசாலைக்குள் முதல்நாள் அடியெடுத்து வைக்கிறேன்..

சின்னத்துரை வாத்தியார் அவர்கள் ஏடுதுவக்கி ஆரம்பித்து வைக்கிறார்..

பனையோலை ஏட்டில் பதித்த அகரமுதலாம் எழுத்துக்களோடு
பள்ளியிலிருந்து வருகிறேன்...

-சின்னாச்சியின்ரமோன்