Dienstag, 1. Mai 2007

ஞானப் பழத்தைப் பிழிந்து...




















எங்கள் வீட்டுக்குப் புதிதாக ஒரு வானொலிப்பெட்டி வந்திருந்தது.
பெரியண்ணா கொழும்பிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கொண்டு வந்திருந்தார்.
ஏற்கனவே வீட்டில் பாடிக்கொண்டிருந்த "கிராமபோன்" பெட்டியில் சாதாரணத் தோசை அளவிலான இசைத்தட்டுக்களைப் போட்டு "தீன கருணாகரனே நடராஜா!" என்று தியாகராஜபாகவதரும்
"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்று சி.எஸ்.ஜெயராமனும்
"ஞானப் பழத்தைப் பிழிந்து..!" என்று கே.பி.சுந்தராம்பாளும்
"மலரின் மதுவெல்லாம் இன்னிசைதானோ..?" என்று ஏ.எம். ராஜாவும் அடிக்கடி பாடிக்கொண்டிருந்ததை நிறுத்தி
"இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு!" என்றும்
"இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு!" என்றும் கேட்கத் தொடங்கியாயிற்று.
ஐந்தாம் வகுப்போடு இராஜராஜேஸ்வரி வித்தியாசாலையிலிருந்து பிரிந்து வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த மகாவித்தியாலயத்தில் போய்ச் சேர்ந்திருந்தேன்.
வீட்டுக்கும் பாடசாலைக்கும் பதினைந்து நிமிட நடைத்தூரம்.
இராஜேஸ்வரியில் மத்தியானத்துடன் பள்ளிக்கூடம் முடிந்து விடும்.
மகாவித்தியாலயத்தில் இரண்டு வேளை வகுப்பு.
மத்தியானம் சாப்பாட்டு வேளைக்கு முக்கால் மணித்தியாலம்.
அந்த இடைவேளைக்குள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து "ஆச்சி"(அப்பாவை "அப்பு" என்று அழைப்பதுபோல் அப்போதெல்லாம் அம்மாவை ஆச்சி என்றுதான் அழைப்பது) ஆக்கிவைத்திருக்கும் சோற்றை அவசர அவசரமாக உருட்டி வாயில் போட்டுவிட்டு திரும்பவும் பாடசாலைக்கு ஓட்டமும் நடையுமாகப் போய்ச்சேர்வது.
பின்னேரம் பாடசாலை விட்ட பிறகு ஆறுதலாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு வருவது..
இப்போது வானொலிப்பெட்டி வந்தபிறகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிடுவேன்.
காலையில் ஓரிரண்டு மணித்தியாலங்களும் பின்னேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலமும்தான் வானொலியில் பாட்டுக்கள் ஒலிபரப்பாகும்.
தேசிய ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு என்று இரண்டு சேவைகள்.
வர்த்தக ஒலிபரப்பே அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
தேசிய ஒலிபரப்பு பின்னேரங்களில் 5 அல்லது 6மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 அல்லது 11மணிவரை ஒலிபரப்பானதாக ஞாபகம்.
தேசிய ஒலிபரப்பு பலவிதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தாலும் வர்த்தக ஒலிபரப்பு திரைப்படப் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு இயங்கியதால் அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
வர்த்தக ஒலிபரப்பின் பிரபலத்துக்கு அப்போது முக்கிய காரணமாக விளங்கியவர் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன்.
ஒருமுறை தமிழ்நாட்டில் ஒரு விழா நடந்ததாம்.அந்த விழாமேடையில் விழா அறிவிப்பாளர் இரசிகர்களைப் பார்த்து இப்போது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் உரையாற்றுவார் என்று அறிமுகப்படுத்திவிட்டு ஒருவரை அழைத்தாராம்.
மேடையில் வந்து நின்றவரை எவருக்கும் தெரியவில்லை.
யாரிவர் என்று எல்லோரும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவர் தனது கம்பீரமான குரலில்"வணக்கம் நேயர்களே! இது இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு இப்போது நேரம் மாலை 6.00மணி.." என்று ஆரம்பிக்க இரசிகர்களின் கரகோசம் வானைப் பிளந்ததாம்.
இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததற்கு இது ஒரு உதாரணம்.
திரைப்படப் பாடல்கள் பலரால் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானபோதும் அது சமூகத்திலும் தனிமனிதரிடத்திலும் ஏற்படுத்திவரும் தாக்கம் அதிகம்தான்.
எனக்குப் பிடித்த பாட்டு என்று ஏதாவதொன்றை உங்களால் நினைத்துப் பார்க்க முடிந்தால் அந்தப் பாடலின் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.
கதைக்குள் பாட்டு அல்லது பாட்டுக்குள் கதை என்று கற்பனை செய்தால் ஒரு இசையும் கதையும் உருவாகிவிடும்.

பெரும்பாலும் கனவுகளிலே மூழ்கிப்போய்விடுகிற எனது சின்னவயசில்நான் அதிகம் வெட்கப்படுகிறவனாகவும் ( "எப்பவும் தாயின்ரை சீலைக்குள்ளைதான் தலை" என்று எனது அம்மாச்சி என்னைப் பேசுவா) இருளுக்கு அஞ்சுகிறவனாகவும், உறவுக்காரர்களைத் தவிர ஏனைய மனிதர்களுடன் பழகுவதற்குப் பிடிக்காதவனாகவும், எப்போதும் தனிமையைத் தேடுகிறவனாகவும் இருந்திருக்கிறேன். (கண்ட கண்ட பெடியங்களோடை சேர்ந்து திரியப்படாது என்று  அப்பா என்னை எச்சரித்து வைத்திருந்ததும் ஒரு காரணம்)
பாடசாலை முடிந்துவந்ததும் பெடியங்கள் கண்ணகி அம்மன் கோவில் மேற்கு வீதியில் கிட்டி, தாச்சி என்று விளையாடிக்கொண்டிருக்கும் மாலை நேரங்களில் நான் வீட்டுக்குள் ஏதாவது புத்தகங்களோடு உறவாடிக் கொண்டிருப்பேன். அப்பாவின் கண்டிப்பு என்னை ஒரு புத்தகப் பூச்சியாக மாற்றுவதற்கு உதவியிருந்தது.
வெறும் கற்பனைக் கதைகளில் மனதைப் பறிகொடுத்திருந்த எனக்கு வாழ்வின் வேறொரு பக்கம் இருப்பதாகக் கற்பித்தவர் தமிழ்வாணன்.
"துணிவே துணை!" என்று பெரிய எழுத்திலும், கல்கண்டு என்பதை சிறிய எழுத்திலுமாகப் போட்டு கல்கண்டை வெளியிட்டு தமிழ்ச் சிறுவர்களின் மனங்களைப் பற்றிக்கொண்ட தமிழ்வாணன், "கல்கண்டு" என்ற இனிப்பான பெயரைச் சூட்டி எதையும் "கண்டு -கல்!" ("காண்பவைகளால் அறிவு பெறு!") என்று உணர்த்தி என்போன்ற சிறுவர்களுக்கு "எழுத்தாள வாத்தியாராக" தன்னை இனம்காட்டினார்.
மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஆச்சியிடம் சொல்லிவிட்டு பாண்வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று சில்லறை வாங்கிக்கொண்டு அந்தக் காசில் மகாவித்தியாலயத்துக்கு முன்னிருக்கும் புத்தகக் கடையில் கல்கண்டு வாங்கி வாசித்த நாட்களும் என் பாடசாலைப் பருவத்தில் அதிகம்தான்.
அதிகமான புத்தகங்கள் தினசரிகள் என்று கொழும்பிலிருந்து வந்தாலும் சிறுவர்களுக்கான கல்கண்டு, கண்ணன் போன்ற புத்தகங்களை ஊருக்குள்ளிருந்த புத்தகக் கடையில் நான் வாங்கினேன்.
என்னுள்ளிருந்த சின்னப்பெடியன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவனுக்கு மீசை அரும்பிய பொழுதில் அவனிடமிருந்த வெட்கத்தையும், பயத்தையும் பிடுங்கி எறிவதற்கென்று எழுத்தாணி கொண்டு வந்தார் இன்னொரு எழுத்தாளர்.
தமிழ்வாணன்போல் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை நூலாக்கித்தந்த அந்த எழுத்தாளர்-
தமிழ்நாட்டு எழுத்தாளரான - அப்துற் றகீம்
தங்கள் எழுத்துக்களால் எனக்கு வாழ்க்கைப் பாடம் போதித்தவர்கள் என்று சொல்வதானால் இவர்கள் இருவரையும்தான் முதலில் நினைத்துக் கொள்வேன் எப்போதும்!
-சின்னாச்சியின்ரமோன்










2 Kommentare:

இந்துமகேஷ் hat gesagt…

ஏ.ஜே.ஞானேந்திரன் எழுதுகிறார்..

உங்கள் வலைப்பதிவைப் பார்வையிட்டேன்.
வழமைபோல அனுபவ முதிர்ச்சியோடு எழுதப்பட்ட
ஆழமான வரிகள் மனதைத் தொட்டன.
உங்கள் சிறுபராயக் கதைகளை அறியும் வாய்ப்பும் கிடைத்தது.
நீங்கள் அன்று புத்தகப் பூச்சியாக மாறியதற்குக் காரணம் அப்பாதான் என்று எழுதியிருந்தீர்கள்.

(என் கதை சற்று வித்தியாசம் புத்தகப் பூச்சியாக இருந்த என் அப்பாதான் என்னை இன்னொரு புத்தகப் பூச்சியாக மாற்றினார்)

இன்று ஒரு தரமான பண்பட்ட எழுத்தாளராவதற்கு ஆரம்ப உரமிட்டவர் தமிழ்வாணன்
என்ற செய்தி எனக்குப் புதிதாக இருந்தது மாத்திரமல்ல வியப்பாகவும் இருந்தது.

நான் சிறுவயதில் கல்கண்டு கண்ணன் அம்புலிமாமா குமுதம் விகடன் என்று ஒன்று விடாமல் வாசித்தவனாக இருந்தாலும்
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது கண்ணன் சிறுவர் சஞ்சிகைகள் தான்.
பல விடயங்களைத்தொட்டு ஒருவர் எழுதியதால் சற்று மிகைப்பட எழுதி தனித்தவில் வாசிக்கிறாரோ என்று நான் இவரைப் பற்றி நினைத்ததுண்டு எது எப்படியோ
இவர் உங்கள் வாத்தியார்களில் ஒருவராக இருந்து இன்று சிறப்பான எழுத்தாளரைத் தந்திருப்பது போற்றுதற்குரியதே!

அப்பு என் அருகில் இருந்து அவர் எழுதாத கதைகளைச் சொல்லித் தந்ததுபோல் கதைகளைச்
சொல்பவர்கள் அருகில் இல்லாமல் அவர்கள் கதைகளில் லயித்துப் போனேன் என்ற உங்கள் வரிகள் என்
மனதைத் தொட்டன.

எழுதாத ஒரு எழுத்தாளனாய் என்னுள் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் என்ற வரிகள்உங்கள் தந்தைக்கு
மகுடம் சூட்டும் வரிகள்.

கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்ல
இதுதானே அறுபதின் நிலை.
-முத்தான வரிகள்தான் நண்பரே!

அறுபதுகளை நோக்கி அவசரமாகப் போய்க்கொண்டிருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
எனக்கு இப்போது 56 வயதாகிறது.

தொலைந்த இளமை திரும்பாதா என்று ஊமைக்கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
உங்கள் வரிகள் என் கதையைத்தான் சொல்கின்றன போலும்.

எதை எழுதுவது எதைவிடுவது?
உங்கள் எழுத்துக்களை வீரகேசரியில்
பணியாற்றிய சமயத்தில் புத்தகமாக வெளிவந்தபோது ரசித்தவன் நான்.
இன்று அந்த எழுத்துக்கள் புதிய பரிணாமம் பெற்று இணையத்துில் உலாவருகின்றன.

தொடருங்கள்!
என் இதயபூர்வமான பாராட்டுதல்கள்.

அன்புடன்
ஏ.ஜே.ஞானேந்திரன்

chinnachiyinramon hat gesagt…

அன்பு ஞானேந்திரன்

தங்கள் வருகைக்காய் மகிழ்கிறேன்.

தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.

தமிழ்வாணனின் எழுத்துக்கள் குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்தபோதும்
அப்போதைய சிறுவர்களான எங்கள் மனதில் அவருக்கென்றோர் தனியிடம் இருந்தது என்பதுமட்டும் உண்மை.

என் சிறுவயதில் எனக்குத் தன்னம்பிக்கையூட்டுகிற விதமாக அமைந்த அவரது கட்டுரைகளாலேயே அவர் என்னை அதிகமாகக் கவர்ந்துகொண்டார்.

எழுத்துலகில் நாம் ஏராளமான படைப்பாளர்களைச் சந்திக்கிறோம்.
ஆயினும் ஒருசிலரைமட்டுமே வகைப்படுத்தி எழுத்தாளர் என்றோ இலக்கியவாதிகள் என்றோ ஏற்றுக்கொண்டு திரும்பத்திரும்ப அவர்களைப் பற்றியே
போற்றலும் புகழ்பாடலுமாய் பொழுதைக் கழித்துவிடும் பலர் ஏனைய படைப்பாளர்களை இருட்டடிப்புச் செய்துவிடுவது காலகாலமாய் தொடர்கிறது.
இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்பது என் விருப்பம்.

எனவேதான் ஒரு சராசரி வாசகனாக இருந்து என்னுள் நினைவுத்தடம் பதித்தவர்களை எல்லாம் மனத்திரையில் நடமாடவிட்டுப் பார்க்கிறேன்.

தங்களைப்போன்ற எழுத்தாள நண்பர்கள் மேலதிக தகவல்களைத் தரும்போது என்னுள் நிறைந்தவர்களைப்பற்றிய முழுமையாய் அறிந்துகொண்ட
நிறைவு எனக்குக் கிட்டும்.

கடந்த காலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்ல
இதுதானே அறுபதின் நிலை.
-என்ற கண்ணதாசனின் வரிகளை நாங்கள் இருபதுகளில் கேட்டபோது அதன் அர்த்தம் பற்றி நாம் அப்போது அதிகமாய் அலட்டிக்கொண்டதில்லை.
இப்போது புரிகிறது.

கடந்தகாலமோ எதிர்காலமோ என்றில்லாமல் நிகழ்காலத்திலேயே தங்கியிருந்தால் இளமை நிலைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அப்படி நிகழ்காலத்திலேயே நிரந்தரமாவதற்கு நிகழ்காலம் தருகின்ற தடைகள் ஏராளம். எனினும் முயற்சிப்போம்.


அன்புடன்
சின்னாச்சியின்ரமோன்