சிலர் எழுதுகிறார்கள் - பலர் எழுதுவதில்லை.
சிலர் சொல்கிறார்கள் - பலர் சொல்வதில்லை.
அவ்வளவுதான் வித்தியாசம்.
மற்றும்படி எல்லோருமே கதாசிரியா்கள்தான்.
ஆனால் எழுதுபவர்மட்டுமே எழுத்தாளர் என்று பேர் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்கள்.
உள்ளமும் உணர்வும் அதன்வழிவருகின்ற அனுபவங்களும் கதைகளாக மாறிவிடுகின்றன.
"நேற்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை!" என்பதில் ஒரு கதை..
"இன்றைக்குத்தான் அவன் என்னுடன் பேசினான்!" என்பதில் ஒரு கதை..
"இனி அவளை நான் சந்திக்கமாட்டேன்" என்பதில் ஒரு கதை..
"அந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது!" என்பதில் ஒரு கதை...
இப்படி ஒவ்வொருவரும் கதைக்கின்ற வாக்கியங்களுக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டிருக்கிற உணா்வு அல்லது அனுபவம்- தன்னுள் ஏதேனும் ஒரு கதையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.
தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை ஒருவர் சொல்லும்போது அதைச் சிலரால் அங்கீகரிக்க முடிவதில்லை.
"சுத்தப் புளுகு!" என்றோ "இவன் கற்பனைசெய்து கதைக்கிறான்!" என்றோ அந்தக் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
மற்றவர் சொல்வதை மறுதலிப்பதனால் தம்மைப் புத்திசாலிகளாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்கின்ற விருப்பத்தின் வெளிப்பாடு அத்தகைய கதைகளை ஒதுக்கிவிடத் தூண்டுகிறது.
சிறுவர்களான எங்கள் உலகம் மகிழ்ச்சிகரமானது.
எதற்காகவேனும் அடம்பிடித்து அழுதாலும் அடுத்தகணமே அந்தத் துன்பத்தின் சாயல் துளியுமின்றி சிரித்து மகிழ்ந்து துள்ளாட்டம் போடுவது. வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே குழந்தைத் தனமான சந்தோசங்களில் மனதைப் பறிகொடுத்திருப்பது.
அந்தப் பொழுதுகளில்-
"அப்பு"வைப்போல் எனக்குத் தொடர்ச்சியாகக் கதைசொல்ல எவராவது வரவேண்டியிருந்தது.
புத்தகங்களின் வடிவில் வந்த எழுத்தாளர்கள் புதியதொரு உலகத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.
நாம் வாழும் இந்த உலகத்தினுள் இன்னொரு உலகத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருந்தது. இது நடக்காது என்று தெரிந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும் கதைகள் அவை.
நாம் வாழும் இந்த உலகத்தினுள் இன்னொரு உலகத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருந்தது. இது நடக்காது என்று தெரிந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும் கதைகள் அவை.
அந்தப் பருவத்துக்குரிய இத்தகைய கதைகளைத் தந்தவர்கள் பலர் இருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் என் மனதுக்குள் இடம்பிடித்துக்கொண்டிருந்தவர்-
வாண்டுமாமா.
அவரது கதைகள் பல தொடர்கதைகளாகவும், சித்திரக்கதைகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அந்தக் கதைகளுக்குள் உலவிய கதாபாத்திரங்கள் பலர், இரவும்பகலும் என்னுள்ளும் உலவிக்கொண்டிருந்தார்கள். மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் என்று புதிய புதிய கனவுலகங்களை அவர் தன் எழுத்தில் எடுத்துவந்தார்.அந்த வண்ணக் கனவுகளில் மனதைப் பறிகொடுத்த காலங்கள் இன்னும் பசுமையாக...
வளரவளர வாழ்க்கையில் இன்னும் அதிசயமான நிகழ்வுகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற பிரமையை அவை தந்தன. அவற்றை வாசிப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி இருந்தது.
வாண்டுமாமாவின் கதைகளைப் போலவே அந்தப் பருவத்தில் நான் வாசித்த புராணக்கதைகளும் ஒருவகை மாயாஜாலக்கதைகள் போலவே அப்போது எனக்குத் தோன்றின.
"ஒரு தேவாரம் படி..!"
"தேவாரமா?"
"என்னடா தேவாரம் தெரியாதா?"
"...........!"
"தோடுடைய செவியன்...!"
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தே ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவன் அன்றே!"
-பாடினேன்.
-பாடினேன்.
ஞானப் பால் உண்ட ஞானசம்பந்தன் பாடிய தேவாரம்.
தீர்த்தக் குளத்தருகே நின்று மூன்றே வயதான ஞானசம்பந்தன் பாடிக் கொண்டிருந்தான்.
தீர்த்தக்குளம் என்றதும் எனக்கு முதலில் நினைவில் வருவது கண்ணகி அம்மன் கோவில் தீா்த்தக் குளம்தான்.
அப்போது கண்ணை மூடிக்கொண்டு அந்தத் தேவாரத்தை நான் ஒப்புவித்தபோது -என் கண்களுக்குள் எங்கள் ஊர்த் தீர்த்தக்குளத்தருகே நின்று ஞானசம்பந்தன் பாடிக்கொண்டிருப்பதாகத்தான் காட்சி விரிந்தது.
கண்ணகியாள் ஆலயத்தின் தெற்கு வீதியில் -அலையெறியும் கடலின் கரையில் அமைந்திருக்கும் அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் நின்று பார்த்தால் மேற்குத் திசையில் செக்கச் சிவந்த சூரியன் கடலுள் விழும் காட்சி விரியும்.
சற்றுத் தொலைவில் கடலின் கரையருகே சுடுகாடு.
சற்றுத் தொலைவில் கடலின் கரையருகே சுடுகாடு.
அதற்கும் சற்றுத் தூரத்தில் வைத்தியசாலை.
"செக்கச் சிவந்த சிவன் சுடலைப்பொடி பூசி என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான்..!"
-என் கற்பனையில் அப்போது விரிந்த காட்சிதான் அது.
என்றாலும் அது வெறும் கற்பனைதானா?
வாண்டுமாமாவின் கற்பனைக் கதைகளை வாசித்துக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில்தான் புராணக் கதைகளையும் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
- சின்னாச்சியின்ரமோன்.

3 Kommentare:
சோழியான் எழுதுகிறார்:
ஒவ்வொருவரும் கதை காவிகள். ஒவ்வொரு வசனங்களை பேசுமம்போதும் அவற்றின் பின்னணியில் ஒவ்வொரு கதைகளுண்டு. உறங்கிக் கிடந்த உண்மைகளை எழுப்பிவிட்டு, கதை எழுத வழிகாட்டிச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-சோழியான்
அன்பு சோழியான்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
என் நினைவுப் பரப்பில் பெயர்பதித்துப் போனவர்கள் பற்றி இக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுவருகிறேன்.
அவர்களில் தாங்கள் அறிந்த பலரும் இருக்கக்கூடும்.
அவர்கள் பற்றி தாங்கள் அறிந்திருக்கக்கூடிய மேலதிகத் தகவல்களைத் தருவீர்களாயின்
இத்தொடரை முழுமையாக்க அது உதவும்.
எனது இந்த வேண்டுகோளை
எழுத்தாளரான உங்களுக்குமட்டுமன்றி
ஏனைய எழுத்தாள நண்பர்களுக்குமாகப் பொதுவில் வைக்கிறேன்.
தொடர்ந்தும் தங்கள் கருத்துக்களை
அவ்வப்போது தருவீாகள் என்றும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
சின்னாச்சியின்ரமோன்
Kommentar veröffentlichen