Dienstag, 12. Juni 2007

கிணற்றுத் தவளையும் புதிய உலகமும்



பரந்த இந்த உலகம் பற்றி அதிகம் அறியாத அல்லது அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத பருவம் அது.


என்வரையில் என் சின்னக் கிராமமே என் உலகம்.

அன்றாட வாழ்க்கையில் அமைதியாய் பொழுதுகளைக் கழிக்கின்ற மனிதர்களே என் உலகத்தில் நிறைந்திருப்பதாய் அப்போது உணர்ந்திருந்தேன்.

(திரையரங்கோ காவல்நிலையமோ என் ஊருக்குள் இருந்ததில்லை என்பதே அதன் சிறப்புக்குப் போதுமான அத்தாட்சி)

பந்தபாசங்கள் நிறைந்த, எதிர்க்கருத்துக் கொண்டவர்களையும் இன்முகத்தோடு வரவேற்ற, சாதி மத பேதங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் நேசிக்கின்ற, அன்பு பாராட்டுகின்ற மனிதர்களே அடிக்கடி என் கண்களில் எதிர்ப்பட்டார்கள்.


இந்த அன்புலகத்தில் வாழ்ந்தபோதும் இதுமட்டுமே உலகம் அல்ல என்றும், இந்தச் சின்னக் கிராமத்துக்கும் அப்பால் பிரமாண்டமானதும் இந்தக் கிராமத்து மனிதர்களிடத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான மனிதர்களைக் கொண்டதுமான ஓர் உலகம் இருக்கிறது என்றும் எனக்குக் கற்பித்தவை பெரும்பாலான கதைகளே.

ஒவ்வொருவருடைய கதைகளுக்குள்ளும் நடமாடும் கதாபாத்திரங்கள், அவர்களது அனுபவங்கள், என் கிராமத்திலிருந்து விலகி வேறோர் உலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றன.


சஞ்சிகைகளில் வெளியான அனேகமான கதைகள் "யாவும் கற்பனை" என்று அடிக்குறிப்பிட்டு வந்தன.

"இந்த இதழில் இடம்பெறும் கதைகள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!" என்று குறிப்பிடுவதன்மூலம் அந்தக் கதைக்கும் அந்தக் கதை தரக்கூடிய பிரச்சனைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று அவை விலகியோடிக்கொண்டிருந்தன.

படைப்பாளர்களே கதைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டி இருந்ததால் உண்மைக்கதை எழுதுபவர்களும் தத்தம் கற்பனைகளைக் கலந்து அது உண்மை என்று தெரியாதவாறு மறைத்துக் கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் கதாபாத்திரங்களுக்குள் தத்தம் குணாதிசயங்களைக் காணும் வாசகர்கள் சிலர் இது உண்மைக்கதைதான் என்று தமக்குள் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆக ஒவ்வொரு கதையினது கதாபாத்திரங்களும் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழவே செய்தார்கள்.


கதைகளை வாசிக்க வாசிக்க அந்தப் பாத்திரங்களோடு ஒன்றித்துப் போகவும் வாசகர்கள் பழகிக்கொண்டார்கள்.

ஒரு பிரபலமான சிறுகதையிலோ நாவலிலோ வரும் ஒரு கதாபாத்திரம் தங்கள் மனதில் நீங்காதிருப்பதாக ஒருவாசகர் சொல்லும்போது அந்தக் கதாபாத்திரமும் இந்த உலகத்தில் உயிருடன் நடமாடுவது போன்ற ஒர் உணர்வை உருவாக்கிடுகிறது.

என் இளயவது வாசிப்பு அனுபவத்தில் நான் சந்தித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் எல்லோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

தமிழ்க் கலை இலக்கியத்தில், ஈழத்துக் கலை இலக்கியம் என்று ஒன்று தனியாக இருக்கிறது என்று எனக்குப் புரியாத வயது அது.

என்றென்றும் தமிழகமே தமிழ்க் கலை இலக்கியத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் என்பதே உண்மை என்றானபோதும் நமக்கென்றும் ஓர் தனித்துவம் உண்டு என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

கிணற்றுத் தவளைபோல் என் கிராமமே உலகம் என்று நான் கருதிக் கொண்டிருந்தாலும் இந்த எனது உலகத்துக்குள் முழுத் தமிழகமும் இருந்தது.


எழுத்துக்களாய் உலாவந்த படைப்பாளர்களும், பாடல்களாய் ஒலித்துக்கொண்டிருந்த கவிஞர்களும் பாடகர்களும், இசைத்தட்டுக்களில் வசனம் பேசிக்கொண்டிருந்த நடிகர்களும் என்று எனது உலகத்தில் தமிழகத்தை இணைத்துவிட்டிருந்தார்கள்.

உலகம் புரிய ஆரம்பித்திருந்தது.

வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து இந்தியாவும் இலங்கையும் விடுபட்டபிறகுதான் நான் பிறந்திருந்தேன்.

சுதந்திரப் போராட்டத்தின் பின் விடுதலைபெற்ற அன்றைய தமிழகம் எப்படியிருந்தது என்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.


பத்துப்பன்னிரண்டு வருடங்கள் கடந்தபிறகு எங்கள் வீட்டுப் பாட்டுப் பெட்டியில் (கிராமபோன்) ஒலித்த பராசக்தி இசைத்தட்டில் சிவாஜிகணேசன் என்ற நடிகரின் வாய்மூலமாக கலைஞர்மு.கருணாநிதி என்றபடைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு அகதித் தமிழனின் உள்ளக் குமுறல் வெளிப்படுவதைக் கேட்டபோது தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும் என்று எனக்குள் ஒரு படம்விரிந்தது.


(தமிழாக்கள் பாவம்...! சுதந்திரம் கிடைச்சும் சந்தோசமாய் இருக்கமுடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகுதுகள்! )



மு.கருணாநிதி என்ற அந்த அற்புதமான படைப்பாளியின் அழகுதமிழில் இலயித்துப்போன மனம் அவரைப்போல வார்த்தைகளைக் கையாளவேண்டும் என்ற ஆசையை என்னுள் வளர்த்தது.

மு.கருணாநிதி என்ற அந்தப் படைப்பாளி திரைத்துறை சார்ந்த கலைஞர்களில் ஒருவர் என்றும் திரைப்படங்களுக்குமட்டும் கதைவசனம் எழுதுகிறவர்போலும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.






-சின்னாச்சியின்ரமோன்



1 Kommentar:

Anonym hat gesagt…

கருத்து



„கிணற்றுத் தவளையும் புதிய உலகமும்“ கட்டுரை ஒரு கால சிந்தனையின் கண்ணாடியாகத் திகழ்கின்றது. அந்நாளைய வாழ்க்கைச் சூழ்நிலைகளில் நமது

பெற்றோர்களும் நாமும் அநேகமாக ஒருவித குழந்தைத்தனமான வஞ்சகமற்ற மனநிலையுடனேதான் வாழ்ந்திருக்கின்றோம் என்பதைத் தற்கால சூழ்நிலையை அவதானிக்கையில்தான் உணர முடிகின்றது.



என்னிலும் தமிழார்வமும் எழுத்தார்வமும் கருத்தார்வமும் வளர்வதற்குக் கலைஞர் கருணாநிதியவர்களின் அன்றைய எழுத்துக்களின் தாக்கங்களுக்கே அதிக பங்குண்டு என்பதை உங்களின் அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியை அடைகிறேன்.



அவரது அரசியல் நிலைப்பாடுகளை வைத்து இலக்கிய ஆர்வலர்கள் அவரைத் தனித்துவிட அனுமதிப்பது தவறுதான் எனபதையே என்னைப்போல் உங்கள் எழுத்துக்களும் வலியுறுத்துவதாக நினைக்கிறேன். அது சரிதானா?



ஆழம் மிகுந்த கிணறுக்கும் அடிமட்டத்தில் நிலமே அத்திவாரம். அதுபோலவே உலகத் தமிழ் இலக்கியத்துக்கு இந்தியத் தாயின் தமிழக இலக்கியங்களே அத்திவாரம். அங்கிருந்து முகிழ்த்த படைப்பு மலர்களின் மணம் கடல் தாண்டிப் பரப்பிய ஆர்வமே ஆழ்ந்து போயிருந்த அனைத்துலக, அதிலும் குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கியங்களுக்கும் ஒரு „தட்டிக் கொடுப்பை“ வழங்கி ஊக்குவித்தன என நான் நம்புகிறேன்.



இன்றைய புலம் பெயர் மண்ணில் இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றுகின்ற பல்லாயிரம் நன்மலர்களுக்குள் ஆங்காங்கே கிடக்கும் புதர்களுக்காக முழுப் பூங்காவையும் மறுப்பது எவ்வண் இயலாதோ, அவ்வண்ணமே தமிழக நல்லிலக்கியங்களுக்குள் கலந்து கிடக்கும் குப்பைகளை வைத்து அதனையும் குறைத்துக் கணித்திடல் இயலாது.



கடந்த காலமே நிகழ்காலத்தின் ஊன்றுகோல் என்பதை உறுதி செய்ய விழையும் உயர்ந்துவரும் உங்கள் எழுத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.



எழிலன