
"உனக்கு இராமாயணம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"சீதையை இராவணன் சிறையெடுத்ததும், பிறகு இராம இராவண யுத்தம் நடந்ததும்!"
"இன்னொரு சம்பவம்!"
"சீதை தீக்குளித்தது!"
"உனக்கு மகாபாரதம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான ஒரு சம்பவம் சொல்லு!"
"பாஞ்சாலி சபதம்!"
"கொஞ்சம் விளக்கமாச் சொல்லு!"
"தருமர் சூதாட்டத்தில் திரெளபதியைப் பணயம் வைத்துத் தோற்றதும், துச்சாதனன் துகிலுரிந்ததும், அவனுடைய இரத்தத்தைப் பூசித்தான் கலைந்த தன் கூந்தலை முடிப்பேன் என திரெளபதி சபதம் எடுத்ததும், பிறகு நடந்த பாரதப் போரும்!"
"சிலப்பதிகாரம் தெரியுமா?"
"தெரியும்!"
"அதில் முக்கியமான சம்பவம்!"
"கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியைத் தேடிப்போனது!"
ம்.. இப்படித்தான்...
எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் மனிதனுடைய தவறுகளும் பலவீனங்களும்தான் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.
அவைகளிலிருந்து அவன் மீண்டுவிட்டால் அத்தோடு கதையும் முற்றுப் பெற்றுவிடுகிறது.
குற்றம் கண்டுபிடிப்பதும் குறைசொல்வதும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகாட்டுவதும் என்றே எல்லாக் கதைகளும் வளர்த்துச் செல்லப்படுகின்றன. இயல்போடு ஒத்ததான எல்லாக் குணாதியசங்களும் எல்லா மனிதர்களிடத்தும் இருக்கின்றன.
சிலரிடம் சில குணாதிசயங்கள் மிகுதியாய்த்தெரிகிறபோது அவர்கள் மற்றவர்களது கவனிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்டகாலமாயிற்று.
எல்லோரையும் நல்லவராகவே பார்த்து வளர்ந்த கண்களுக்கு ஆங்காங்கே சிலரது குறைபாடுகள் தெரியத் தொடங்கியபோது முற்றிலும் புதிதான வேறோர் உலகத்துக்கு வந்துகொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.
வானொலி வழியாக வந்த பாடல்களில் பெரும்பாலானவை காதலையே அடிநாதமாகக் கொண்டு ஒலித்தபோதும் வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் அவை எடுத்துவரத் தவறவில்லை.
கவிதைகள் பற்றி அவ்வளவு ஆர்வமில்லாத ஒரு பருவத்தில் பாடல்களை அதிகமாய் இரசிக்க முடிந்திருந்தது.
கவிதைகளும் பாடல்களும் ஒன்றா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பாடல்களுக்குள் கவிதைகள் இருந்தன.
கவிதைகளுக்குள்ளும் பாடல்கள் இருந்தன என்று எனக்குக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.
அவர் திரைப்படங்களுக்கு எழுதிய சில பாடல்கள் ஒரு தொகுப்பாக என் சின்னவயதில் எ
னக்குக் கிடைத்தபோது அதில் ஆழ்ந்து போனேன்.வார்த்தைகளால் தமிழுக்கு வண்ணம் சேர்த்த கலைஞர் கருணாநிதிபோல் பாடல்களால் தமிழுக்கு அழகுசேர்க்க வந்தவன் நான் எனத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார் கண்ணதாசன்.
திரைப்படப் பாடல்கள் எல்லாமே கவிதைகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. கவிநயமில்லாத அல்லது கவிதையே இல்லாத இரண்டு வசனங்களை எழுதி அதற்கு இசையமைத்து அதை ஒரு பாடலாக மாற்றிவிடமுடியும்.
ஆனால் எழுதிய பாடல்கள் எல்லாமே கவிதைகளாக உருப்பெற்றிருந்த விந்தையை கண்ணதாசனிடம் கண்டேன்.
என் சிறுவயதில் என் மனதில் இடம் பிடித்துக்கொண்ட கவியரசு கண்ணதாசன் இங்கே இன்னும் நிரந்தரமாகக் குடியிருக்கிறார்.
-சின்னாச்சியின்ரமோன்