வெறுமனே கற்பனைக்குள்மட்டும் சிறைப்பட்டுக்கிடக்கிற காட்சிகளே கதைகளாக மாறுவதைக்காட்டிலும் கண்ணெதிரே விரிகின்ற காட்சிகள் அப்படியே எழுத்துவடிவம் பெறும்போது அதிலுள்ள யதார்த்தம் மனங்களில் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.
கற்பனை என்பதுகூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்றாலும் "யாவும் கற்பனையே!" என்பதிலும் "யதார்த்தம்" என்பதற்கு இலக்கியத் தகுதி அதிகம் உண்டு.
"இதுதான் வாழ்க்கை!" என்று அப்படியே அச்சொட்டாக ஒப்புவிக்கிற படைப்புக்கள் "இதுதான் உலகம்!" என்ற உண்மையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கற்பனையிலிருந்து நாம் யதார்த்தத்திற்குக் காலடி எடுத்து வைக்கிறோம்.
தமிழகத்துப் படைப்பாளர்களின் கற்பனைகளோடும் எழுத்துக்களோடும் கலந்துமகிழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான பொழுதுகளின்போது திடீரென ஒர்நாள் ஒரு மாலைப்பொழுதில்"தென்றலும் புயலும்" என்னை வந்தடைந்தது.
நான் வாலிபனாகிக் கொண்டிருப்பதை அவ்வப்போது எனக்கு உணர்த்திக்கொண்டிருந்த தருணங்கள் அவை.
"வயதுவந்தவர்களுக்குமட்டும்!" என்று அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்ட எச்சரிக்கையை மீறிஅவற்றை வாசிக்கலாமா கூடாதா என்று தடுமாறுகிற பருவம். கையில் அகப்படுவதையெல்லாம் வாசித்துவிடு என்று துடிக்கிற மனது.
"பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை நிண்டு என்ன வாய்பார்த்துக் கொண்டிருக்கிறை..அங்காலை ஓடு!" என்று அதட்டுகிற பெரியவர்கள் இப்போதெல்லாம் என்னைப் பற்றிக் கவலைப்படாமல் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்.
"பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை நிண்டு என்ன வாய்பார்த்துக் கொண்டிருக்கிறை..அங்காலை ஓடு!" என்று அதட்டுகிற பெரியவர்கள் இப்போதெல்லாம் என்னைப் பற்றிக் கவலைப்படாமல் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்.
"ஓ.. பெடியன் வளந்திட்டான்!"
தென்றலும் புயலும் எல்லோரும் வாசிக்கத் தக்க நாவல்தான்.
அதை வாசித்தபோது நான் வேறோர் உலகத்துக்குள் காலடி எடுத்துவைத்ததான ஓர் உணர்வு என்னுள் படர்ந்தது.
எனக்கு மிக அருகில் - எனக்குத் தெரிந்த மனிதர்கள் அந்தக்கதையில் இருப்பதுபோல் - அந்தக் கதாபாத்திரங்கள் என்னை நெருங்கி வந்தார்கள். எழுத்துக்களுக்குள் மண்வாசனை இருக்கிறது என்பதை எனக்குப் புரிய வைத்த முதற்கதை அது.
சராசரி வாசகர்கள் என்று கருதப்படுபவர்களால் சராசரிக்கதைகள் என்று சொல்லப்படுகிற கதைகள் வேறு சிலருக்கு காவியங்களாகத் தென்படுவது உண்டு.
"தென்றலும் புயலும்" கதை எனக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் அதைப்படித்த நேரத்தில் நான் அடைந்த உணர்வு இன்னும் என்னுள் புதிதாகவே இருக்கிறது.
அதை எழுதியதின் மூலம் என்னுள் புகுந்துகொண்ட அதன் ஆசிரியர் இளங்கீரன் (சுபைர்) இன்றும் என்மனதில் தனக்கென ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
பின்னாட்களில் அவர் தன் எழுத்துகளால் ஏராளமான வாசகர்களைக் கட்டிவைத்திருந்தார் என்பதை அறிந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை. அவரை எப்போதோ தெரிந்துவைத்திருக்கிறோம் என்று ஒருவித பெருமிதம் என்னுள் குடியேறியிருந்தது.
ஈழத்து இலக்கிய உலகில் அவரது சாதனைகள் பற்றி இப்போது பேசப்படும்போது அந்தப் பெருமிதம் இன்னும் அதிகமாகிறது.
-சின்னாச்சியின்ரைமோன்.
