Montag, 25. September 2017

நீங்காத நினைவுகள்!




இரங்கும் இல்லத்தில்
எமது கலைஞர்கள்!

1992 ஐப்பசித் திங்களில் ஒரு நாள்.

„ ஜேர்மனியில் பல பாகங்களில் மலர்ந்து மணம்கமழ்ந்து மணிகளாய்ச் சிதறிக் கிடக்கும் கலைஞர்கள், வாழும்கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுப்பணியாளர்கள் அனைவரையும் ஓரணியில் சேர்த்து பலவண்ணம் நிறைந்த மலர்மாலையாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளேன். 17.10.92 சனிக்கிழமை அன்று பிராங்க்பேர்ட்டில் மாலை 4மணிமுதல் இரவு 10மணிவரை வருகைதரும்  அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் அவர்களைச் சமமாய்க் கௌரவித்து பரிசில்கள் வழங்கவும் அவர்கள்பற்றிய சஞ்சிகை ஒன்றை வெளியிடவும் இராப்போசனம் வழங்கவும் அதே மண்டபத்தில் சிறியபிள்ளைகளை பராமரிக்கவும் ஒழுங்குகள் செய்துள்ளேன். ஈழநாடு ஆதரவில் இரங்கும் இல்லத்தினரால் நடாத்தப்படும் இந்தக்  கலைஞர்கள் கூடலுக்குத் தாங்கள் குடும்பத்தினருடன் சமூகம் தந்து சிறப்பிப்பீர்களென நம்புகிறேன்….!“

-சில மாதங்களுக்கு முன்பு (1992இல்) அன்பர் திரு ஸ்ரீபதி அவர்களின் அழைப்புக் கிடைத்திருந்தது. வாழும்போதே கலைஞர்களைக் கௌரவிக்கும் பணி உயரியது. வளரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது. இன்று இலைமறை காய்களாய் (ஸ்ரீபதியின் தமிழில் மலர்களாக) பரவிக் கிடக்கும் அத்தனை கலைஞர்களையும் ஒன்றுதிரட்டும் பணி அத்தனை சுலபமானதா? சிரமமான இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்திருக்கிறார் திரு ஸ்ரீபதி.

அந்த மாலைப்பொழுது அறிவிப்பாளர் ஜெகனின் அழகு தமிழில் ஆனந்தமாக ஆரம்பித்தது. பிஞ்சுக் கலைஞர்களிலிருந்து கனிந்த கலைஞர்கள்வரை கலந்துகொண்ட அந்த மண்டபம் ஒரு கலைத்கூடமாகவே காட்சிதந்தது.

„…இந்த மண்டபத்தில் நிற்கும்போது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நின்று உரையாடிக் கொண்டிருப்பதுபோன்ற உணர்வு தோன்றுகிறது! ஏன்று தலைமை உரையில் குறிப்பிட்டார் ஈழநாடு ஆசிரியர் எஸ்.எஸ்.குகநாதன்.

மேலை நாட்டவர்கள் நமது கலை கலாச்சாரங்களைப் பின்பற்ற முனையும் இக்காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்கின்ற நம்மவர்களில் பலர் மேலைத்தேசத்தவரின் நாகரீகத்தைப் பின்பற்ற முனைவது வேதனைக்குரியது!“  என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலை கலாச்சாரங்களை வளர்த்தெடுக்க முனையும் கலைஞர்கள் மத்தியில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர கலைஞர்களால் முடியும். நம்மோடு பின்னிப் பிணைந்துவிட்ட நமது மொழி கலை கலாச்சாரங்களுக்:கு நாம் வாழும் நாடுகளில் எத்தகைய இடத்தைப் பெற்றுத்தரப் போகிறோம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

„இப்போது கலைஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களைத் தவிர இங்கு சமூகமளிக்காத ஏனைய கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டி கலைஞர்களின் விபரங்களடங்கிய சஞ்சிகையின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட ஆவன செய்யப்படவேண்டும்“ என்று கலைவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

அனைத்துக் கலைஞ்களையும் அணிதிரட்டி ஈழ அகதிகளின் இன்னல் துடைக்க இரங்கும் இல்லத்தின்மூலம் செயலாற்றிவரும் திரு ஸ்ரீபதி அவர்களுக்கு ஒவ்வொரு கலைஞரும் கைகொடுக்க வேண்டும் அவர்தம் சேவை சிறக்க வாழ்த்துரைக்கவேண்டும்.

திரு ஸ்ரீபதி அவர்களுக்கு இத்துறையில் பெருமளவு ஒத்தழைப்பு நல்கிவரும் கவிஞர் முகில்வாணன் அவர்களுக்கும் பூவரசு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பூவரசு இனிய தமிழ் ஏட்டின்மூலம் எழுத்தளவில் நான் சந்தித்துக்கொண்ட சகோதர சஞ்சிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரை முகம்காண வைத்த கலைக்காவலன் ஸ்ரீபதி அவர்களுக்கும் இரங்கும் இல்லத்துக்கும் நன்றி

-இந்துமகேஷ்
(பிரசுரம்: பூவரசு கார்த்திகை- மார்கழி 1992)









Mittwoch, 20. September 2017

நான் சொல்ல வந்ததும் சொல்லாமல் வந்ததும்!



-இந்துமகேஷ்

வெற்றி நிலா முற்றம் 2017
விருதும் விருந்தும் 

                                          




கடந்த மாதம் (ஆவணி 2017) வெற்றிமணி தனது 250வது இதழை வெளியிட்டிருந்தது. ஆரவாரம் எதுவுமின்றி அது வெளிவந்தபோதும் அதுகுறித்து வெற்றிமணியின் படைப்பாளர்களும் வாசகர்களும் பேரானந்தம்
கொள்ளத் தவறவில்லை.

பல்கலைச் செல்வர் கலாநிதி மு.க.சு.சுpவகமாரன் (கண்ணா) அவர்களது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும்  வெளிப்படுத்திய வெற்றிமணியின் வளர்ச்சி குறித்து படைப்பாளர்கள் வாசகர்கள் என்று எங்கள் எல்லோருக்குமே புளுகம்தான்.

„இந்த ஆண்டு வெற்றிமணி விழா விருதும் விருந்துமாக நிகழவிருக்கிறது கட்டாயம் வந்து கலந்துகொள்ளவேண்டும்!“  என்று அன்புக்கட்டளை பிறந்தது கண்ணாவிடமிருந்து. வழக்கம்போல் வெற்றிமணி படைப்பாளர்கள் கலைஞர்கள் வாசகர்கள் என்று பலருக்கும் விருந்தளிப்பதோடு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறது! வெற்றிமணியின் மூத்த படைப்பாளி என்றவகையில் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவேண்டும்!“ என்றார் அவர்.

„வெற்றிமணி ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக மதுரகவி வி. கந்தவனம் அவர்களின் கரங்களால் இலக்கியச் செம்மல் விருதும் அதற்குப்பின்னால் சில வருடங்களில் சிவத்தமிழ் விருதும் எனக்குக் கிடைத்திருக்கிறதே இனி என்ன விருது தரப்போகிறீர்கள்?“ என்றேன்.
„விருது வழங்கும் நிகழ்வுதான். ஆனால் உங்களுக்கல்ல. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மூத்த - இளைய படைப்பாளர்களுக்குத்தான் விருதுகள்!“ என்றார் அவர்.

„சரி விருதுதான் இல்லை. விருந்தாவது கிடைக்குமா?“
„விருதும் விருந்தும்தானே விழா!“ என்றார் அவர்.

இம்முறை விழா நேரத்துக்கு சற்று முன்னதாகவே சமூகமளித்திருந்தேன்.
கண்ணாவும் அகரம் ஆசிரியர் இரவீந்திரன் அவர்களும் நிகழ்ச்சி ஒழுங்குகளில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அடுத்த ஓரிரு மணித்தியாலங்களில் விழா ஆரம்பமாயிற்று.
வரவேற்புரைக்கு வந்த கண்ணா, „இன்றைய விழாவின் பிரதம விருந்தினராக வெற்றிமணியின் மூத்த படைப்பாளர் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை வரவேற்கிறேன்!“ என்றார். இது நான் எதிர்பார்க்காத ஒன்று.

இவ்விழாவில் விருது வழங்கும் நிகழ்வுக்கு அதிகநேரம் தேவைப்படுவதால் வாழ்த்துரை வழங்குபவர்கள் தமது உரைகளை 5 நிமிடத்துக்குள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவித்தார் அவர்.
அந்த நேரக்கட்டுப்பாட்டை அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றிய இரவீந்திரன் முறையாகக் கடைப்பிடித்தார்.

„ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்லவே 5 நிமிடம் தேவைப்படுமே. அதனால் தனித்தனியாக வணக்கம் சொல்லமாட்டேன்!“
என்று எழுத்தாளரும் பேச்சாளருமான திரு. புத்திசிகாமணியும்,
 „அறிவிப்பாளர் என்னை அறிமுகம் செய்ய 3 நிமிடம் எடுத்துக்கொண்டுவிட்டதால் அந்த 3நிமிடத்தையும நான் மேலதிகமாக எடுத்துக்கொள்கிறேன்!“ என்று எழுத்தாளர் சபேசனும் வேடிக்கையாகக் குறிப்பிட்டாலும் வாழ்த்துரை வழங்கிய ஏலையா ஆசிரியர் முருகதாசன், தமிழருவி ஆசிரியர் நயினை விஜயன், மண் ஆசிரியர் சிவராஜா, எழுத்தாளர்கள்  ஸ்ரீஜீவகன், புத்திசிகாமணி, சபேசன்,  கவிதாயினிகள் நகுலா சிவநாதன் கௌசி சிவபாலன் ஆகியோர் உட்பட அனைவரும் நேரக் கட்டுப்பாட்டுக்கமையவே  தங்கள் வாழ்த்துரைகளை சிறப்புறவே வழங்கியிருந்தார்கள்  

„எனக்கான நேரம் எப்போது?“ என்றேன்
„குறிப்பிட்ட நேரத்துக்கு நான் இரயில் நிலையம் திரும்பவேண்டும்.!“

„எல்லோருக்கும்  விருது வழங்கியபின் உங்களுக்கான நேரம்!“ என்றார் இரவி.
சொன்னதுபோலவே கலைநிகழ்ச்சிகளும் விருதுவழங்கும் நிகழ்வும் நிறைவுக்கு வந்தபின்னர். விருதுபெற்றவர்கள் முன்னிலையில் ஒலிவாங்கியை என்னிடம் தந்தார் இரவி.
„இப்போது நீங்கள் பேசலாம்!“
„ஐந்த நிமிடம்தானே?“
„இல்லை நீங்கள் விரும்பியபடி எவ்வளவுநேரமானாலும்!“

முழுமையாகப் பேசுவதானால் ஆகக்குறைந்தது  ஒருமணி நேரமாவது தேவைப்படும்.   அதுவரை எனக்கான இரயிலும் விழாவுக்கு வருகை தந்தவர்களும் காத்திருக்கப் போவதில்லை என்று புரிந்தது. .
5 நிமிடத்திலேயே முடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

1950 களில் தாயகத்தில் தளிர்விட்ட வெற்றிமணி மீண்டும் 1990களில் ஜெர்மனியில் பதியமிடப்பட்டு  இன்று வளர்ந்து உலகெங்கும்
கிளைபரப்பி தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களில் இடம்பிடித்து தொடர்ந்தும் உற்சாகமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

 „வெற்றிமணியா அது என்ன விளம்பரப் பத்திரிகைதானே!“ என்று ஆரம்ப காலங்களில் அதனைச் சாதாரணமாக எடைபோட்டவர்களின்
நினைப்புக்களை வேரறுத்து தமிழ்வாழும் இல்லமெல்லாம் தன் பணியை இளமையாக கவர்ச்சியாக புதுமையாகத் தொடரும் வெற்றிமணி…
தமிழ்க் கலைஇலக்கியத்துக்கு அளப்பரிய தொண்டாற்றிவருகிறது… படைப்பாளிகளுக்குக்  களம் அமைப்பதோடு பல்வகை நூல்களையும்
இசைவடிவங்களையும வெளியிட்டு சாதனை புரிந்து வருகிறது.
வாழும்போதே வாழ்த்தப் பழகுவோம் என்று அனைத்துக் கலைஞர்களையும் வரவழைத்து அரவணைத்து ஆண்டுதோறும விருதளித்து கௌரவிக்கும் அதன் மகத்தான பணி போற்றுதற்குரியது.

தந்தையின் பணியைத் தொடரும் கண்ணாவும் அவரது கலை இலக்கிய சமூகப் பணிகளின் தொடர்ச்சியாய் எதிர்காலத்தின் நட்சத்திரங்களாய்த் திகழும் அவரது மகன் சஞ்சயும் மகள் சிவஜெனனியும் தமிழ்க்கலை இலக்கிய உலகின் வெற்றிமணிகளே!   கலை இலக்கிய ஆர்வலர்களின் வாழ்த்தும் வரவேற்பும் என்றும் அவர்களுக்கு நிலையானது.!“

இப்படித்தான் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னும் நான் சொல்லவந்ததில் அதிகமானவற்றை நண்பர் முருகதாசன் அவர்கள் உட்பட
 பல வாழ்த்துரையாளர்கள் சொல்லிவிட்டதால் மீளவும் நான் சொல்வது அழகல்ல என்று தவிர்த்துவிட்டேன்.

பொன்னாடைக் கலாச்சாரம்பற்றி கண்ணா என்ன நினைத்துக்கொண்டாரோ அதைத் தவிர்த்துவிட அவர் நினத்திருந்தார் போலும்.
ஆனால் கால காலமாக நம் பண்பாட்டு வழக்கில் வரும் பொன்னாடைக் கலாச்சாரத்தை புறந்தள்ளுதல் அழகல்ல என்று எனக்குத் தோன்றிற்று.
ஒருசில இடங்களில் அவசியமற்ற தோள்களுக்கு பொன்னாடைகள் போய்விடுகின்றன என்பதற்காக அவை புறக்கணிக்கப்படவேண்டியன அல்ல.
வாழ்த்தப்படவேண்டியவர்களை வாழ்த்தும் நெஞ்சமும் வாழ்த்தப்பட வேண்டியதுதான்.
அதை வாழ்த்துவதற்காகவே கண்ணாவுக்கு படைப்பாளர்கள் சார்பில் நானும்
வெற்றிமணியின் வாசகர்கள் சார்பில் நண்பர் செல்வக்குமாரும் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
தமிழ்க் கலை உலகுக்கு வெற்றிமணியின் சேவையும் தேவையும் அதிகம் உண்டு என்பதை அவருக்குத் தெரியப்படுத்தவே அந்தப் பொன்னாடை.


முக்கிய குறிப்பு:
விருதும் விருந்தும் நிகழ்வில் வெற்றிமணியின் இளைய படைப்பாளர்கள் என்று சில புதுமுகங்களைக கண்டேன்.
45 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நானும் கண்ணாவும் போல் அவர்கள் தெரிந்தார்கள். வெற்றிமணியை எழுத்துக்களால் அலங்கரிக்க
அவர்கள் இருக்கிறார்கள்.
வெற்றிமணியின் 100வது ஆண்டுமலரில் அவர்கள் எனது இந்தக் கட்டுரையை மீள்பதிப்புச் செய்வார்கள்என்று நம்புகிறேன்.



 

Dienstag, 12. September 2017

நல்லமனம் வாழ்க!


நல்லமனம் வாழ்க!
- இந்துமகேஷ்


பலரும் எழுதுகிறார்கள், தங்கள் படைப்பாற்றல்மூலம் வாசகர்மனங்களில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள். வாசகர்களிலும் பலவகையானோர் உளர். அகப்பட்ட எல்லாவற்றையும் படிப்பவர், இன்னதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று ஒரு வரையறைக்குள் நின்று படிப்பவர் தரமானவை என்ற பெரும்பாலானோரின் கணிப்புக்கு உட்பட்டவைகளை மட்டுமே படிப்பவர், தனக்குப் பிடித்தமான படைப்பாளர்களின் படைப்புக்களைமட்டுமே படிப்பவர் என்று வாசகர்களை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

படைப்பாளர்கள் எழுதிக்குவிக்கிறார்கள். எல்லாப் படைப்புக்களும் எல்லா வாசகர்களையும் எட்டுவதில்லை. ஒருவர் என்று ஆரம்பித்து, சிலர் இணைந்து வீடாகி, பல வீடுகள் இணைந்து சமூகமாகி, பலசமூகங்கள் இணைந்த ஊராகி பல ஊர்கள் இணைந்து நாடாகி பல நாடுகள் இணைந்து கண்டங்களாகி, பலகண்டங்கள் இணைந்து உலகமாகி …


„யாதும் ஊரே யாவரும் கேளிர்!“ என்று கணியன் பூங்குன்றனார் சொன்னதும், „உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்!“ என்று இந்துமகேஷ் சொன்னதும் இந்த உலகின் ஒருமைப்பாட்டைக் குறிப்பதோடு ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உலகம் உள்ளடங்கியிருக்கிறது என்பதையும் உணர்த்தும் வாசகங்கள்.

உணவு, உடை, உறைவிடம் என்று ஒரேவிதமான தேவையின் அடிப்படையில் அமைந்த மனித வாழ்வு கலை இலக்கியங்களால் பண்படுத்தப்பட்டது. வாழும் சூழலுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட வாழ்வு வெவ்வேறு மொழி சார்ந்து சில வேறுபாடுகளைத் தோற்றுவித்தது. ஆனால் அடிப்படையிலான மனித உணர்வுகளில் மாற்றமில்லை. அதனால்தான் எந்த மொழியினாலான கலையும் இலக்கியமும் அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடிய எல்லா மனிதருக்குமே உரியதாகிவிடுகிறது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!" என்று சொல்லும்போது கைதட்டிச் சிரிக்கிற சில தமிழர்கள் அதையே வேற்று இனத்தவன் „தமிழ்தான் உலகின் முதல்மொழி“ என்றும் „அது செம்மொழி“ என்றும் ஆதாரபூர்வமாக உரைக்கும்போது வியந்து பார்க்கிறார்கள்.

“….பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல்லப் பான்மைகெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர்!“ என்று கலங்கிய பாரதி இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தான். "...சேமமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!“

அவனது கனவு நனவாகிவிட்டது. இன்றைய தலைமுறையும்  அதன் சிந்தனைகளும் செந்தமிழ்மீதான அதன் பற்றுதலும் செழித்து வளரத் தொடங்கிவிட்டன.

தமிழ் மொழித் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் எண்ணிக்கையற்ற கவிமலர்கள்.
அவற்றை நம்மிடம் எடுத்துவரும் இணையத்தளங்கள்… பட்டென்று மனத்தில் ஒட்டிக்கொள்ளும் சில படைப்புக்களைப் பார்த்ததுமே அதைப் படைத்தவனைஃ படைத்தவளை அறியத்துடிக்கின்ற ஆர்வம் எழுவது இயல்பு.

படைக்கும்வரை தனிமையைத்தேடும் மனது படைப்பின் இரசனை என்று வரும்போது அதை மற்றவர்களோடு பங்குபோட்டுக்கொள்ளவே விரும்புகிறது. அதைப் பகிர்ந்துகொள்ளத் தக்கவர்களைத் தேடி ஓடுகிறது.
  எழுதும் நேரம் தவிர்த்து சில மிகுதியான நேரங்களில் அவ்வப்போது சில புதிய பக்கங்களில் நுனிப்புல் மேய்வுது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

அண்மையில் சில படைப்பாளர்களின் பக்கங்களில் பார்வையைப் படரவிட்டேன். வியப்பும் மகிழ்ச்சியும்!

சுபபாலா என்றொரு படைப்பாளி.
„அடடா… நல்லா எழுதுகிறானே!“ என்று தோன்றிற்று…அவனை எனக்குத் தெரியாது . ஒருநாள் எதேச்சையாக அவனது கவிதை ஒன்று கண்ணில்பட்டது.
நான் எழுத நினைத்தவைகளை அப்படியே இவன் எழுதியிருக்கிறானே…என்று வியக்கவைக்கும் வரிகள்….

அப்படியே எடுத்து என் முகநூலில் இணைத்தேன்.
 தான் இரசித்த சில கவிஞர்களுக்கு அறிமுகம் தந்த அவனது கவிதை இது:

இவர்கள் கவிதைகளை
பதிவுகளை படித்ததுண்டா
கவிதை எழுதுவோர்களே
கவிதைகளை விரும்பி படிப்போர்களே
இவர்கள் கவிதைகளை பதிவுகளை
அவர்கள் முகப்பக்கம்  சென்று 
படித்து பாருங்கள்
ஆழ்ந்து உணர்ந்த உண்மைகளும்
அவசரப்படாத வார்த்தைக்கோர்ப்புகளும் 

மௌனமாய் பேசும் ...........!
மண்வாசமும்
மனதின் பாசமும்
காதல் நேசமும்
கவிதை ஊர்வலம் போகும்
அந்த வார்த்தையில் ஆயிரம் வலி
மறைந்து பேசும்
ஓயாமல் ஓடும் நதிபோல்
ஒவ்வொருநாளும்
எழுத்தால் உலாவும் இந்த
உணர்வாளர்களை வாழ்த்துங்கள்!
தினம் படித்து
உங்கள் மனம் இனிப்பத்தை
கருத்து தீபம் ஏற்றி போற்றுங்கள்
புதிய எழுச்சி எழுத்தில் தோன்ற
உங்கள் ஊக்கப்படுத்துதல் வாழ்த்துக்களால்
அவர்கள் கவிதைகளும்
உலக உயரம் தோன்றும்
அனைவருக்கும்
சுபகவிசொந்தங்களின்
நல்வாழ்த்துக்கள்
(வளரும் )

-

நாம் நம்மவர் என்று ஒரு சிறுகூட்டுக்குள்மட்டுமே அடங்கிவிடாமல் பரவலாய் நம் பார்வையைத் திருப்பவேண்டிய தருணம் இது.

நம்மைக் கவர்பவைகளை நாலுபேரோடு நாம் பகிர்ந்துகொள்வோம்.
எல்லாப் படைப்பாளர்களும் தங்கள் தங்கள் பக்கங்களில் தங்களைக் கவர்ந்த படைப்பாளர்களுக்கு அறிமுகம் தாருங்கள். வாரம் ஒருமுறை அல்லது மாதாந்தம் ஒருமுறையேனும் அவர்களை அறிமுகம் செய்யுங்கள்.

தமிழ்ப் படைப்புலகம் இன்னும் வளம்பெறும்.

தொடர்வோம்!