Dienstag, 12. September 2017

நல்லமனம் வாழ்க!


நல்லமனம் வாழ்க!
- இந்துமகேஷ்


பலரும் எழுதுகிறார்கள், தங்கள் படைப்பாற்றல்மூலம் வாசகர்மனங்களில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள். வாசகர்களிலும் பலவகையானோர் உளர். அகப்பட்ட எல்லாவற்றையும் படிப்பவர், இன்னதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று ஒரு வரையறைக்குள் நின்று படிப்பவர் தரமானவை என்ற பெரும்பாலானோரின் கணிப்புக்கு உட்பட்டவைகளை மட்டுமே படிப்பவர், தனக்குப் பிடித்தமான படைப்பாளர்களின் படைப்புக்களைமட்டுமே படிப்பவர் என்று வாசகர்களை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

படைப்பாளர்கள் எழுதிக்குவிக்கிறார்கள். எல்லாப் படைப்புக்களும் எல்லா வாசகர்களையும் எட்டுவதில்லை. ஒருவர் என்று ஆரம்பித்து, சிலர் இணைந்து வீடாகி, பல வீடுகள் இணைந்து சமூகமாகி, பலசமூகங்கள் இணைந்த ஊராகி பல ஊர்கள் இணைந்து நாடாகி பல நாடுகள் இணைந்து கண்டங்களாகி, பலகண்டங்கள் இணைந்து உலகமாகி …


„யாதும் ஊரே யாவரும் கேளிர்!“ என்று கணியன் பூங்குன்றனார் சொன்னதும், „உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்!“ என்று இந்துமகேஷ் சொன்னதும் இந்த உலகின் ஒருமைப்பாட்டைக் குறிப்பதோடு ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உலகம் உள்ளடங்கியிருக்கிறது என்பதையும் உணர்த்தும் வாசகங்கள்.

உணவு, உடை, உறைவிடம் என்று ஒரேவிதமான தேவையின் அடிப்படையில் அமைந்த மனித வாழ்வு கலை இலக்கியங்களால் பண்படுத்தப்பட்டது. வாழும் சூழலுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட வாழ்வு வெவ்வேறு மொழி சார்ந்து சில வேறுபாடுகளைத் தோற்றுவித்தது. ஆனால் அடிப்படையிலான மனித உணர்வுகளில் மாற்றமில்லை. அதனால்தான் எந்த மொழியினாலான கலையும் இலக்கியமும் அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடிய எல்லா மனிதருக்குமே உரியதாகிவிடுகிறது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!" என்று சொல்லும்போது கைதட்டிச் சிரிக்கிற சில தமிழர்கள் அதையே வேற்று இனத்தவன் „தமிழ்தான் உலகின் முதல்மொழி“ என்றும் „அது செம்மொழி“ என்றும் ஆதாரபூர்வமாக உரைக்கும்போது வியந்து பார்க்கிறார்கள்.

“….பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல்லப் பான்மைகெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர்!“ என்று கலங்கிய பாரதி இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தான். "...சேமமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!“

அவனது கனவு நனவாகிவிட்டது. இன்றைய தலைமுறையும்  அதன் சிந்தனைகளும் செந்தமிழ்மீதான அதன் பற்றுதலும் செழித்து வளரத் தொடங்கிவிட்டன.

தமிழ் மொழித் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் எண்ணிக்கையற்ற கவிமலர்கள்.
அவற்றை நம்மிடம் எடுத்துவரும் இணையத்தளங்கள்… பட்டென்று மனத்தில் ஒட்டிக்கொள்ளும் சில படைப்புக்களைப் பார்த்ததுமே அதைப் படைத்தவனைஃ படைத்தவளை அறியத்துடிக்கின்ற ஆர்வம் எழுவது இயல்பு.

படைக்கும்வரை தனிமையைத்தேடும் மனது படைப்பின் இரசனை என்று வரும்போது அதை மற்றவர்களோடு பங்குபோட்டுக்கொள்ளவே விரும்புகிறது. அதைப் பகிர்ந்துகொள்ளத் தக்கவர்களைத் தேடி ஓடுகிறது.
  எழுதும் நேரம் தவிர்த்து சில மிகுதியான நேரங்களில் அவ்வப்போது சில புதிய பக்கங்களில் நுனிப்புல் மேய்வுது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

அண்மையில் சில படைப்பாளர்களின் பக்கங்களில் பார்வையைப் படரவிட்டேன். வியப்பும் மகிழ்ச்சியும்!

சுபபாலா என்றொரு படைப்பாளி.
„அடடா… நல்லா எழுதுகிறானே!“ என்று தோன்றிற்று…அவனை எனக்குத் தெரியாது . ஒருநாள் எதேச்சையாக அவனது கவிதை ஒன்று கண்ணில்பட்டது.
நான் எழுத நினைத்தவைகளை அப்படியே இவன் எழுதியிருக்கிறானே…என்று வியக்கவைக்கும் வரிகள்….

அப்படியே எடுத்து என் முகநூலில் இணைத்தேன்.
 தான் இரசித்த சில கவிஞர்களுக்கு அறிமுகம் தந்த அவனது கவிதை இது:

இவர்கள் கவிதைகளை
பதிவுகளை படித்ததுண்டா
கவிதை எழுதுவோர்களே
கவிதைகளை விரும்பி படிப்போர்களே
இவர்கள் கவிதைகளை பதிவுகளை
அவர்கள் முகப்பக்கம்  சென்று 
படித்து பாருங்கள்
ஆழ்ந்து உணர்ந்த உண்மைகளும்
அவசரப்படாத வார்த்தைக்கோர்ப்புகளும் 

மௌனமாய் பேசும் ...........!
மண்வாசமும்
மனதின் பாசமும்
காதல் நேசமும்
கவிதை ஊர்வலம் போகும்
அந்த வார்த்தையில் ஆயிரம் வலி
மறைந்து பேசும்
ஓயாமல் ஓடும் நதிபோல்
ஒவ்வொருநாளும்
எழுத்தால் உலாவும் இந்த
உணர்வாளர்களை வாழ்த்துங்கள்!
தினம் படித்து
உங்கள் மனம் இனிப்பத்தை
கருத்து தீபம் ஏற்றி போற்றுங்கள்
புதிய எழுச்சி எழுத்தில் தோன்ற
உங்கள் ஊக்கப்படுத்துதல் வாழ்த்துக்களால்
அவர்கள் கவிதைகளும்
உலக உயரம் தோன்றும்
அனைவருக்கும்
சுபகவிசொந்தங்களின்
நல்வாழ்த்துக்கள்
(வளரும் )

-

நாம் நம்மவர் என்று ஒரு சிறுகூட்டுக்குள்மட்டுமே அடங்கிவிடாமல் பரவலாய் நம் பார்வையைத் திருப்பவேண்டிய தருணம் இது.

நம்மைக் கவர்பவைகளை நாலுபேரோடு நாம் பகிர்ந்துகொள்வோம்.
எல்லாப் படைப்பாளர்களும் தங்கள் தங்கள் பக்கங்களில் தங்களைக் கவர்ந்த படைப்பாளர்களுக்கு அறிமுகம் தாருங்கள். வாரம் ஒருமுறை அல்லது மாதாந்தம் ஒருமுறையேனும் அவர்களை அறிமுகம் செய்யுங்கள்.

தமிழ்ப் படைப்புலகம் இன்னும் வளம்பெறும்.

தொடர்வோம்!


Keine Kommentare: