
நல்ல மனம் வாழ்க !
-இந்துமகேஷ்
தங்கள் எழுத்துக்களால் என் இதயத்தில் தங்கள் பெயர்பதித்துப் போனவர்களையும் பெயர்பதித்துக் கொண்டிருப்பவர்களையும் பதிவுசெய்யும் நோக்கோடு பூவரசம்பூ என்னும் இந்த வலைப்பக்கத்தை உருவாக்கினேன். அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்ற நினைப்பு என்னை ஆட்கொண்டிருந்ததால் என் பால பருவத்திலிருந்து என்னைக் கவர்ந்தவர்கள் என்று தொடங்கி இன்று வரை வரிசைக்கிரமமாய்ப் பதிவு செய்யவே விரும்பினேன்.
ஆனால் அதற்கான சூழல் அமையாது போயிற்று. முன்னவர்களைப்பற்றிய குறிப்புக்களை எழுதி முடிப்பதற்கே உன் ஆயுள் போதாதே.. 60 ஆண்டுகால ஈழத்துப் படைப்புக்களை உன்னால் எப்படி எழுதி முடித்துவிட முடியும் என்று என் மனம் என்னைக் கேலி செய்தது. இன்றைய தலைமுறைவரை எழுதினால்தானே உன் படைப்பு முழுமை பெறும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.
அரிச்சுவடியிலிருந்து வரிசைக்கிரமமாக எழுதும் எண்ணத்தை மாற்றி அவ்வப்போது நினைவில் வருபவர்களையும் நிகழ்காலத்தில் என் வாசிப்புக்குரியவர்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
என்னதான் உலகப் பரப்பளவில் வாசித்துக்கொண்டிருந்தாலும் நமது படைப்புக்கள்- நமது படைப்பாளர்கள் என்று ஒரு வட்டத்துக்குள் மனம் ஒடுங்கிப்போவதைத் தடுக்கமுடிவதில்லை.
பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்று வாசித்துக்கொண்டிருந்த காலம்போல் அல்லாமல் வலைப் பதிவுகள் என்று வந்தபிறகு அதிகரித்துவிட்ட படைப்புக்களும் படைப்பாளர்களும் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்: எல்லாவற்றையும் எல்லோரையும் ஒரேமூச்சில் எழுதிவிடமுடியாதபோதும் ஒரு சிலரையேனும் என் பதிவுகளில் இணைத்துவிட்டால் அவர்களிலிருந்து இன்னும் பலர் பதிவுகளைத் தொடங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு எழுத முயன்றேன்.
பூவரசு வெளிவந்தபோது என்னுடன் அரிமுகமாகிய இளைஞர்களில் இருவர் எழுத்துலகில் எனது மனோநிலையை ஒத்திருக்கக் கண்டேன்.
முன்பின் அறிமுகமில்லாத அவர்களின் அன்பும் படைப்புக்களும் என்னை அவர்கள்பால் ஈர்த்தது.
என் இலக்கியத்தம்பிகள் என்று என் எழுத்தாள நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய அவர்களில் ஒருவர்; கானாபிரபா என்ற இலக்கியத்தம்பி.
ஈழத்துப் படைப்புக்கள் படைப்பாளர்கள் என்று அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டுபவராக அவர் இருக்கிறார். அவரது எழுத்தாற்றலும் இரசனை மனமும் அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக அடையாளம் காட்டுகிறது. தனது வலைப்பதிவுகள்மூலம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் நட்புக்களையும் பெற்றிருக்கும் அவருக்கு நான் அறிமுகம் தரத் தேவையில்லை.
இன்று தனது வலைப்பதிவில் தனது 12 ஆண்டுப் பயணம்பற்றிப் பதிவிட்டிருந்தார் அவர்.
https://kanapraba.blogspot.de/
"அந்த நல்ல மனம் வாழ்க!" என்று இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரைப் பற்றிய இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன். தன்னைப் போன்ற கலை இலக்கியவாதிகளை இணைத்துக்கொண்டு தமிழ் எழுத்துலகில் அவர் பணி சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
-இந்துமகேஷ்
